ஒரு குடும்பத்தையே துன்பத்துக்குள் தள்ளிய படுபாதகப் பேர்வழிகள்! | தினகரன்

ஒரு குடும்பத்தையே துன்பத்துக்குள் தள்ளிய படுபாதகப் பேர்வழிகள்!

 

கைகளில் போடப்படுகின்ற விலங்கை மேலே தூக்கிக் காட்டியபடி வீரர்கள் போல் நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வண்டியில் பயணம் செய்வது தற்போது ஒருசில அரசியல்வாதிகளுக்கு நாகரிகமாக மாறியுள்ளது. அதனைப் பின்பற்றிய புதியவர் லிந்துல நகரசபைத் தலைவராவார்.

எல்லா மரங்களையும் கொத்தி இறுதியில் வாழைமரத்தில் கொத்தும் போது மரங்கொத்திக்கு ஏற்பட்ட நிலைமையே அவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர் செய்த பல தவறுகள் வெளிவராத போதும் இம்முறை அவர் அகப்பட்டுக் கொண்டுள்ளார்.

லிந்துல நகரசபைத் தலைவர் அனகிபுர அசோக்க சேபால அண்மையில் பெண்ணொருவரையும் இரண்டு பிள்ளைகளையும் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். அதுமாத்திரமல்ல, அந்த குழந்தைகளை விற்றமை, குழந்தைகளின் தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் நகர சபை உறுப்பினரும் நண்பருமான இஸார அனுருத்த மஞ்சநாயக்கவும் அவரது ஆதரவாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர் அக்கரப்பத்தனையைச் சேர்ந்த கல்லெனவத்தையில் வசித்த 26 வயதான பெண்ணாவார். பெற்றோாரை இழந்ததால் பதினொரு வயதில் பிலியந்தலையிலுள்ள சிறுவர் விடுதியொன்றில் வளர்ந்து வந்துள்ளார். 19 வயது பூர்த்தியடைந்தவுடன் அக்கரப்பத்தனை பிரதேச இளைஞரொருவரை திருமணம் முடித்துள்ளார். அதன் பின்னர் கணவருடன் அக்கரப்பத்தனையில் குடியேறியுள்ளார்.

கணவருடனும் கணவரின் தாயாருடனும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அவர்களின் குடும்பத்துக்கு இரண்டு மழலைகள் இணைந்து கொண்டார்கள். ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் பெண் குழந்தையையும் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார்கள். சந்தோஷமான இவர்களின் வாழ்க்கையில் ஏழ்மை மெல்ல எட்டிப் பார்த்தது. அதனால் குடும்பத் தலைவன் தொழிலுக்காக கொழும்புக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மனைவி கொழும்பில் வீடொன்றை வாடகைக்கு எடுக்குமாறும் தானும் ஏதாவது தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்றுவதாகவும் கூறியுள்ளார். அதற்கும் பணம் பிரச்சினையாக இருந்தது. ஆகவே அம்முயற்சியும் கைவிடப்பட்டது. இதனால் இருவருக்கிடையேயும் மனக்கசப்பும் ஏற்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனையைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியான ஓராகந்த லியனகே ஜயந்த பீரிஸ் என்பவர் இந்தப் பெண்ணை இவ்வேளையிலேயே சந்தித்துள்ளார். இலகுவாக வேலையொன்றை தன்னால் பெற்றுக் கொடுக்க முடியுமென அவர் கூறியுள்ளார். அவரது உடைகளை எடுத்துக் கொண்டு தலவாக்கலை பஸ்நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளார். பிள்ளைகளை தனியே விட்டுச் செல்ல விரும்பாததால் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தலவாக்கலை பஸ்நிலையத்துக்கு அப்பெண் சென்றுள்ளார்.

அந்தத் தாயையும் குழந்தைகள் இருவரையும் ஏற்றிக் கொண்டு சென்ற முச்சக்கரவண்டி லிந்துல நகரசபை உறுப்பினர் இஸார மஞ்சநாயக்க வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டது. அங்கு அவர்கள் சில நாட்கள் சிறைக்கைதிகள் போல் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவரின் கைத்தொலைபேசியின் சிம்கார்ட்டையும் உடைத்தெறிந்து அவரால் யாருக்கும் தகவல் வழங்க முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் லிந்துல நகரசபைத் தலைவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இங்குதான் அக்கரப்பத்தனை வைத்தியசாலை ஊழியரான திலகரத்ன நேரடியாக தொடர்புபடுகின்றார். இந்தப் பெண்ணை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப தான் தயார் என்றும் பிள்ளைகளை யாரிடமாவது வளர்ப்பதற்கு கொடுக்க வேண்டுமெனவும் நகரசபைத் தலைவர் அசோக சேபால வீட்டில் வைத்துக் கூறியுள்ளார். பின்னர் வஞ்சகமாக அவரிடம் பல கடிதங்களில் கையெழுத்தைப் பெற்றுள்ளார்கள். அதில் 5 வயதான மகளை சட்டபூர்வமாக வளர்ப்பதற்கு காலியிலுள்ள குடும்பமொன்றுக்கு கொடுப்பதாக எழுதப்பட்டிருந்து. குழந்தையை விற்பதற்கு எவ்வளவு பணம் பெற்றார்கள் என்பதைக் கூட இதுவரை அந்தத் தாய் அறியவில்லை.

அதன் பின்னர் ஆண் பிள்ளையும், தாயும் வைத்தியசாலை ஊழியர் திலகரத்னவின் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். மூன்று மாதங்கள் அங்கே அவரை தங்க செய்து அதன் பின்னர் வெளிநாட்டுக்குச் செல்லத் தேவையான ஆவணங்களை தயாரித்துள்ளார்கள். திலகரத்னவால் ஆமர்வீதியிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் கடவுச் சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்வதற்கு 2 வயது மகன் தடை என்பதால் அக்குழந்தையையும் விற்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் முதற் கட்ட நடவடிக்கையாக தலவாக்கலை பதள பிரதேச விஹாரையிலுள்ள தேரரொருவரிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதேவேளை தங்கியிருந்த வீட்டில் திலகரத்ன என்னும் நபரால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அப்பெண் முறையிட்டுள்ளார்​ே

இவ்வாறான நிலைமையில் குழந்தைகளின் தந்தை தன்னால் எடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். தாயையும் குழந்தைகளையும் தேடுவதில் முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அவர்கள் வீட்டைவிட்டு காணாமற் போன தினமே அக்கரப்பத்தனைக்குச் சென்று தலவாக்கலை பொலிஸில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதுமாத்திரமல்ல பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திலும், பொலிஸ் மா அதிபருக்கும் காணாமற் போனோர் ஆணைக்குழுவுக்கும் இச்சம்பவம் தொடர்பாக எழுத்து மூலம் அறியத் தந்துள்ளார்.

இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸாரால் நுவரெலிய மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஏ. ஆர். 1291 இன் கீழ் வழக்குத் தொடுத்துள்ளார்கள். கடந்த ஒரு வருட காலமாக ஒவ்வொரு வழக்கு விசாரணையின் போதும் அந்த தந்தைக்காக இலவசமாக சட்டத்தரணி எஸ்.மோகன்ராஜ் ஆஜராகியுள்ளார். ஆனால் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இடம்பெற்று வந்தன.

அதற்குக் காரணம் தற்போதுதான் தெளிவாகியுள்ளது.

அதாவது லிந்துல நகர சபைத் தலைவர் அசோக சேபாலவும், நகர சபை உறுப்பினர் இஸார மஞ்சநாயக்கவும் முன்னாள் அமைச்சரான சீ. பி. ரத்நாயக்கவின் ஆதரவாளர்கள் என்பதினாலாகும். 

 

கடந்த தேர்தலில் வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுயாதீன வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால், நகர சபைக்கு வந்தபின்னர் பொதுஜன ஐக்கிய முன்னணி (மொட்டுக் கட்சி)யினரின் ஆதரவைப் பெற்று நகரசபைத் தலைவராகியுள்ளார். அவர் அப்பதவியை இரண்டாவது தடவையாக வகிக்கின்றார். இதற்கு முன்னரான பதவிக் காலத்தில் பொதுமக்களின் நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக இவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குழந்தைகள் இருவரையும் விற்பனை செய்து அந்தப் பெண்ணையும் வீட்டுக் காவலில் வைத்திருந்த வேளையில் அப்பெண்ணை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாது என சந்தேகநபர்கள் அறிந்துள்ளார்கள். காரணம் அவரது கணவரால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டமையாகும். அவ்வேளையில் வெளிநாடு செல்ல முயற்சி செய்தால் இந்த சூழ்ச்சி விமான நிலையத்தில் தெரியவரும் என்பதனாலாகும்.

அதனால் அவர்கள் அப்பெண்ணை பத்தரமுல்லையிலுள்ள வீடொன்றுக்கும் பின்னர் பிலியந்தலயிலுள்ள வீடொன்றுக்கும் பணிப்பெண்ணாக அனுப்பியுள்ளார்கள். பிலியந்தலை அப்பெண்ணுக்கு மிகவும் பழக்கப்பட்ட நகரமாகும். அது சிறுவயது முதல் வளர்ந்த சிறுவர் இல்லம் அமைந்த இடமாகும். தனக்கு கிடைத்த சந்தர்ப்பமொன்றை பயன்படுத்தி பிலியந்தலையிலுள்ள தனது நண்பர்களுக்கு இந்த விபரங்களைத் தெரிவித்துள்ளார். தான் பிலியந்தலை வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலை செய்வதாகக் கூறியுள்ளார். அவ்வேளையில் அவர் காணாமற் போய் ஒரு வருடங்கள் கடந்து விட்டிருந்தது. சிறுவர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் கணவர் மூலம் அப்பெண், காணாமற் போயிருந்ததை ஏற்கனவே அறிந்திருந்தார்கள். பின்னர் கணவர் பிலியந்தலையிலுள்ள வீட்டிற்கு சென்று தனது மனைவியை மீட்டுள்ளதுடன் தலவாக்கலை பத்தன பிரதேசத்தில் விஹாரையிலிருந்த தனது மகனையும் மீட்டுள்ளார்.

அதன்பின்னர் அப்பெண் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று அனைத்து தகவல்களையும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான ஏ. ஆர். 1291 வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, அதாவது கடந்த 04 ஆம் திகதி சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த துரதிர்ஷடமான சம்பவத்துக்கு முகங்கொடுத்த 5 வயது பெண் குழந்தையை அக்கரப்பத்தனைக்கு அழைத்து வந்து நுவரெலியாவிலுள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்தில் அனுமதிக்குமாறு நுவரெலியா மாஜிஸ்திரேட் பிரமித்த ஜயசேகர உத்தரவிட்டார்.

ஜூன் 05 ஆம் திகதி பெண் குழந்தையை தம்மிடம் வைத்திருந்ததாக கூறப்படும் தம்பதியரும், இடைத்தரகரொருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த திட்டமிட்ட அக்கிரமத்தை நடத்தியவர்களு்கு சட்டத்தின் மூலம் தண்டனை வெகு விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

சாவித்திரி விதானகே 

 


Add new comment

Or log in with...