மல்வத்து மகாநாயக்க தேரருடன் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு | தினகரன்

மல்வத்து மகாநாயக்க தேரருடன் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு

 
வே​லை நிறுத்த போராட்டங்களால் அப்பாவிகளே பாதிப்பு - மகாநாயக்க தேரர்
ஒன்று முடிந்தால் இன்னொன்று என்ற நிலையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர் என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தின் போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோரும் அரசாங்கமுமென இரு தரப்பினரும் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுப்பில்லாமல் செயற்படும்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது முடியாமற் போகின்றது என்றும் அவர் மல்வத்து மகாநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் கூட்டு தபால் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மல்வத்து விகாரைக்குச் சென்று மகாநாயக்க தேரரைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன் போதே அவர், அவர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கத்தின் இணைப்புச் செயலாளர் கே.எம். சிந்தக்க பண்டாரவினால் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான காரணங்களை உள்ளடக்கிய ஆவணமொன்றை மகாநாயக்க தேரரிடம் கையளித்தனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த மகாநாயக்க தேரர், இந்த தபால் வேலைநிறுத்தப் போராட்டம் மட்டுமன்றி எத்தகைய வேலைநிறுத்தப் போராட்டமானாலும் இறுதியில் அது பொதுமக்களுக்கே பிரச்சினையாகிவிடுகின்றது. அவர்களே அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. பிரச்சினைகளோடு தொடர்புடைய இரு தரப்பினரும் காத்திரமான நிலைப்பாட்டோடு தீர்வொன்றை பெற்றுக்கொள்ளாத நிலையில் இருதரப்பினரும் அர்ப்பணிப்புடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்பட்டால் பிரச்சினைகள் இந்தளவு நீடிக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள், தபால் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. வசதிபடைத்தோர் தமது சேவைகளை கூரியர் சேவை மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர். சாதாரண மக்களே பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.

வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில் 27,000 ஊழியர்கள் 11 தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுடைய சம்பளத்தை வழங்குவதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பளம் இடைநிறுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்க ஊழியர்கள் கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொள்ளும்போது, அதனை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனரே தவிர பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிப்பதில்லை. தற்போது நாம் முன்னெடுத்துள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் சத்தியாக்கிரகம். சாகும்வரை உண்ணாவிரதம் ஆகியன தொடரும் என்றும் அவர்கள் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளனர். (ஸ)

 


Add new comment

Or log in with...