மனிதருக்குள் ஒளிந்திருக்கும் மிருகம்! | தினகரன்

மனிதருக்குள் ஒளிந்திருக்கும் மிருகம்!

அரிசித் தவிட்டை நீரில் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக்கி காய வைத்த பின்னர், பயிர்ச்செய்கை நிலங்களின் எல்லையில் அங்கொன்று இங்கொன்றாக தரையில் போட்டு விடுவார்கள்.

இரவு வேளையில் பயிர் நிலங்களுக்குள் உணவுக்காகப் படையெடுக்கும் பன்றிக் கூட்டங்களுக்கு இடைவழியிலேயே தவிட்டு உருண்டைகள் கண்ணில் தென்பட்டு விடும்.

அவை ஆசையாக தவிட்டு உருண்டையொன்றைக் கடித்ததும் அதன் வாய்க்குள் வைத்து பெரும் சத்தத்துடன் பட்டாசு ஒன்று வெடிக்கும்.

அந்தத் தவிட்டு உருண்டைக்குள் பட்டாசு ஒன்றை (எறிவெடி) யாரோவொரு மனிதன் தந்திரமாக வைத்திருக்கிறானென்ற உண்மையை அந்த அப்பாவிப் பன்றி அறிந்திருக்கவில்லை.

வாயும் தொண்டைப் பகுதியும் கிழிந்து போன பன்றி பெரும்பாலும் அவ்விடத்திலேயே துடிதுடித்து இறந்து போகும். இல்லையேல் வலி தாங்காமல் சில நாட்கள் அலைந்து திரிந்துவிட்டு இறுதியில் பரிதாபமாக இறந்து போகும்.

பன்றிகளைக் கொல்வதற்காகக் கையாளப்படுகின்ற இந்த ‘தவிட்டு உருண்டைத் தாக்குதல்’ இலங்கையின் விவசாயப் பிரதேசங்கள் பலவற்றில் இடம்பெற்றுள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. கிழக்கின் நெற்செய்கைப் பிரதேசங்களிலும் இந்த அக்கிரமம் நடந்திருக்கின்றது!

பன்றிகளைக் கொல்வதற்கு இரு நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவது நோக்கம் அவற்றிடமிருந்து விவசாயப் பயிர்களைக் காப்பாற்றுவது. இரண்டாவது நோக்கம் அவற்றை இறைச்சிக்காக வேட்டையாடுவது.

பகுத்தறிவற்ற அப்பாவிப் பிராணிகளை மனிதன் எத்தனை தூரம் ஈவிரக்கமின்றி இம்சைப்படுத்துகின்றான் என்பதை எண்ணுகையில் மனம் பதறுகிறது!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்விதமாக ஏராளமான காட்டுப் பன்றிகளை அண்மைக் காலமாக கொன்றொழித்து விட்டார்கள். இன்னும் சில வருடங்களில் இலங்கையில் காட்டுப்பன்றி என்ற இனமே முற்றாக அருகிப் போய்விடும் ஆபத்து இருக்கிறது.

மனிதனுடைய இலக்கு காட்டுப்பன்றிகள் மட்டுமல்ல...இதேபாணியில் யானைகள் பலவற்றையும் கொன்றொழித்திருக்கிறார்கள் ஈவிரக்கமற்ற மனித மிருகங்கள்!

ஏராளமான எறிவெடிகளை பூசணிக்காய்க்குள் ஒன்றாகத் திணித்து யானைகள் வருகின்ற வழியில் வைத்து விடுவார்கள். இரவில் இரைதேடி விவசாய நிலங்களுக்குள் வருகின்ற யானை தனது துதிக்கையினால் பூசணிக்காயை எடுத்து வாய்க்குள் வைத்து கடிக்கும் போது, அங்கு பெரும் அகோரமே நடந்து விடும்.

தொண்டைப் பகுதி சிதைவடைந்தாலோ அன்றி இரத்தப் பெருக்கு தொடர்ந்தாலோ யானை உடனேயே இறந்து விடலாம். இல்லையேல் உணவை உண்ண முடியாத நிலையில் அந்த யானை அலைந்து திரிந்த பின்னர் சில தினங்களில் இறந்து போகலாம்.

மனிதனுடைய வஞ்சினம் காரணமாக இலங்கையில் காட்டு விலங்குகள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. யானைகள், பன்றிகள், மான்கள், மரைகள், சிறுத்தைகள், முயல்கள், நரிகள் என்றெல்லாம் நீண்டதொரு பட்டியல் கொண்ட பிராணிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காட்டு முயல்கள், நரிகள், மரைகள் போன்றவற்றையெல்லாம் இப்போது காடுகளில் காண்பது அரிதாகி விட்டது என்கிறார்கள் விலங்கு ஆர்வலர்கள்.

காட்டு விலங்குகளை அழித்தொழிப்பதற்காக நஞ்சூட்டப்பட்ட இரைகளை தந்திரமாக வைத்துவிடும் முறையையும் கையாள்கிறார்கள். நஞ்சூட்டப்பட்ட இரையை எந்தவொரு காட்டு விலங்கும் உண்ணக் கூடும். மனிதனுக்கு எந்தவிதத்திலும் இடைஞ்சல் தராத மனிதநேய காட்டுப் பிராணிகளும் இதனால் அழிந்து போவதற்கு இடமிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் மனிதனுக்குக் கவலை கிடையாது!

மனிதனின் நோக்கம் சுயநலம் கொண்டது. அவனைப் பொறுத்தவரை தனது நோக்கம் நிறைவேறினால் போதும்.

எமக்குத் தீங்கு தருகின்ற அத்தனை பிராணிகளையும் கொன்றொழித்து விடுவதுதான் சரியென்று நினைக்கின்ற எண்ணம் முட்டாள்தனமானது!

பூமியின் உயிர்ச்சாசியமானது ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்டவாறு உள்ளது. இதனை ‘உணவு வலை’ என்கிறோம். புவியில் வாழும் ஒவ்வொரு வகை உயிரினத்துக்கென்றும் பிரத்தியேகமான இயல்புகள் உள்ளன. பெரும்பாலும் அப்பிராணியின் உணவைப் பொறுத்துத்தான் அவற்றின் குணவியல்புகளும் அமைந்திருப்பதுண்டு. அது இயற்கையின் படைப்பு!

ஆடு, மாடு, மான், முயல் போன்றவை புற்களையும் இலைகுழைகளையும் உண்கொண்டு சாதுவாக இருப்பதைப் போல, சிறுத்தையினால் அவ்விதம் அமைதியாக இருந்துவிட முடியாது. ஊனுண்ணும் விலங்குகள் ஆக்ரோஷமான குணவியல்பைக் கொண்டிருப்பது வழமை.

மனிதன் தனது இறைச்சித் தேவைக்காக அப்பாவிப் பிராணிகளைக் கொல்வதைப் போன்று, ஊனுண்ணும் விலங்குகளும் இரையை வேட்டையாடுவதற்காக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது இயல்பு.

எமக்குத் தீங்கு தருகின்ற அத்தனை விலங்குகளையும் அழித்தொழிப்பதுதான் நியாயமென்றால் யானை, பாம்பு போன்றவையெல்லாம் மனிதர்களைத் தாக்குவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யும்.

ஏனெனில் பிராணிகளின் வசிப்பிடமான காடுகளை ஆக்கிரமித்துக் கொண்டமை மனிதன் இழைத்த முதல் தவறாகும். அப்பிராணிகளின் நிம்மதியான வாழ்வை மனிதன் பாழாக்கி விட்டான். அவற்றின் இருப்பிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதுடன் மாமத்திரமன்றி, அவற்றுக்கான உணவுகளையும் இல்லாமலாக்கி விட்டான். அதேசமயம் அப்பிராணிகளுக்குத் தீங்கிழைத்தும் வருகின்றான்.

அப்பிராணிகள் இருப்பிடமும், உணவுமின்றி தறிகெட்டு அலைந்து திரிந்து, வேறு வழியின்றி மனித குடியிருப்புகளுக்குள் பிரவேசிக்கத் தொடங்கி விட்டன.

சுயநலமும், பலமும் பொருந்திய மனிதனின் நடவடிக்கையினால் பிராணிகளின் வாழ்வு இப்போது கேள்விக்குறியாகியிருக்கின்றது. ‘பிராணிகளைக் கொல்வதில் தவறில்லை’ என்ற எண்ணத்தின் ஒரு வெளிப்பாடுதான் கிளிநொச்சி அம்பாள்புரத்தில் சிறுத்தை ஒன்றுக்கு நேர்ந்த பரிதாபம்!

இலங்கையின் அரியவகை உயிரினங்களில் சிறுத்தையும் ஒன்றாகும். எமது சூழலில் அதுவும் ஒரு அங்கம். காட்டுச் சூழலில் உயிரங்கிகளின் சமநிலையைப் பேணுவதில் சிறுத்தை போன்ற வேட்டையாடும் மிருகங்கள் ஒரு இணைப்பாக இருக்கின்றன. தரைவாழ் பிராணிகளில் அதிகூடிய வேகத்தில் ஓடக்கூடிய சிறப்புக்குரிய சிறுத்தையானது, இலங்கைக்கே உரிய அரியவகைப் பிராணிகளில் ஒன்றாகும். அது வேகமாக அருகி வருகின்றது என்பது விலங்கு ஆர்வலர்களைக் கவலையடைய வைத்திருக்கின்றது. எனவே சிறுத்தைகள் உட்பட எமது நாட்டின் பெருமளவான பிராணிகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. இவை முற்றாக அழிந்து போகுமானால் அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கத் தவறியவர்களாக நாம் ஆகிவிடுவோம்.

இவ்வாறெல்லாம் இருக்கையில், மனிதர்களைத் தாக்குகின்றது என்பதற்காக பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து சிறுத்தையொன்றை அடித்துக் கொன்று,மரத்தில் கட்டித் தொங்க விட்டு, அக்காட்சியை பெருமையுடன் முகநூலிலும் பதிவுசெய்திருக்கிறார்கள். மனிதநேயம் கொண்ட எவருமே ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் அக்கிரமம் இது! ஒரு குழந்தை அடித்துக் கொல்லப்பட்டது போன்று பரிதாபமாக இறந்து கிடந்தது அச்சிறுத்தை! மக்களைத் தாக்கிய செயலுக்காக சிறுத்தைக்கு மரணதண்டனை கொடுத்தது நியாயமென்றால், சிறுத்தையைக் கொன்றவர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனைதான் என்ன? பகுத்தறிவற்ற அந்த ஜீவன் கொல்லப்பட்ட காட்சியைப் பார்க்கும் போது மனம் வலிக்கிறது!


Add new comment

Or log in with...