சிறுத்தையை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் | தினகரன்

சிறுத்தையை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்

கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் சிறுத்தையொன்றை கொடூரமாக அடித்துக் கொலை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று முன்னாள் வனவள அமைச்சரும் தற்போதைய புத்தசாசன அமைச்சருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நடைபெற்றது இரக்கமற்ற செயலாகும். வெளிநாட்டில் தான் இது நடந்தது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், இங்கு தான் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இதனுடன் தொடர்புடைய அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தர்மம் நிலைகொண்டுள்ள நாட்டில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது வெட்கக்கேடாகும். வனவள அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரான சரத் பொன்சோக இது குறித்து கவனம் செலுத்துவார் என நம்புகிறேன் என்றும் அமைச்சர் கூறினார்.

இதையடுத்து ஜே.வி.பியின் மற்றுமொரு எம்.பியான நளிந்த ஜயதிஸ்ஸ, காலியில் யானையொன்று கொல்லப்பட்டதையும் இதனுடன் தொடர்புள்ள நபர் முகநூலில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் வனஜீவராசி அதிகாரிகளுக்கு கூட கடமையை செய்வதற்கு இடமளிக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, இராணுவத்தளபதியாக இருந்த பீல்ட்மார்சல் சரத்பொன்சேகாவே தற்போது துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். அவர் உரிய நடவடிக்கையெடுப்பார் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, இது சம்பந்தமாக விசாரணை முன்னெடுக்கப்படுவதாக சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

 

 


Add new comment

Or log in with...