Friday, March 29, 2024
Home » விதண்டாவாதங்களுக்கு பதிலளிப்பதைவிட மக்களுக்கு வீடுகளை அமைப்பதே எனது இலக்கு

விதண்டாவாதங்களுக்கு பதிலளிப்பதைவிட மக்களுக்கு வீடுகளை அமைப்பதே எனது இலக்கு

‘நாம் 200’ 25 ஆம் திகதி நிகழ்வில் விளக்கமளிப்பேன்

by damith
November 20, 2023 6:10 am 0 comment

விதண்டாவாதம் பேசுபவர்களுக்கு பதிலளிப்பதைவிட எனது மக்களுக்காக வீடுகளை அமைப்பதே எனது இலக்கென நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையகம் நாம் 200 நிகழ்வு தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் தொடர்பில், எதிர்வரும் 25இல், விளக்கமளிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

“விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக் கொண்டு, மற்றையவர்களை தாழ்த்திபேசி காலத்தை வீணடிப்பதைவிட, மலையக மாற்றம் பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கி றேன். அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கிறேன்.

இதற்கு எமது மக்களும் ஆதரவு வழங்கி வருகின்றனரெனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா – நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகளை, அமைச்சர் ஜீவன் தொண்டமான் கடந்த 18 இல், வழங்கி வைத்தார்.அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

” மலையகத்தில் வீடு கட்ட முடியாது, வீடு கட்டுவதற்கு நிதி இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு பதிலளிப்பதற்கு நாம் விரும்பவில்லை.

தனிநபர்களையும் விமர்சிக்கவில்லை. மாறாக செயலில் இறங்கினோம். இதன்பலனாகவே வீடுகளை கையளிக்க முடிந்துள்ளது.

நுவரெலியா மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின்போது எனக்கு அமோக ஆதரவை வழங்கினர். எனவே, மக்கள் நலன்கருதி, அனைத்து மலையக கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். நல்லெண்ணத்துடன் செயற்பட்டேன். அதற்கான சிறந்த ஆரம்பத்தையும் வழங்கினேன். ஆனால் நேரில் ஒன்றையும், வெளியில் சென்று மற்றுமொன்றையும் பேசுபவர்கள்தான் இருக்கின்றனர். கடும் சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியிலேயே காணி உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம். பழைய விடயங்களை வைத்து எனக்கு ஆதரவு வழங்க வேண்டியதில்லை. இப்போது என்ன செய்கின்றோம் என சிந்தித்து பாருங்கள், அதற்கான பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. மக்களுக்கு பிரச்சினை என்றால் நாம் வருகின்றோம், நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்த வீட்டு திட்டத்தை நிறைவு செய்துள்ளோம்.

எமக்கு ஒரு இலட்சத்து 76 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. 10 ஆயிரம் வீடுகள்தான் தற்போது எம்வசம் உள்ளன. எனவேதான் காணி உரிமையை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி, அதனை முன்னெடுத்துவருகின்றோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT