முடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்! | தினகரன்

முடிவின்றி என்றும் தொடரும் தமிழினத்தின் அரசியல் ஏக்கம்!

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒன்றரை வருட காலம் பாக்கியிருக்கின்றது. அதேசமயம் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருபது மாதங்கள் மீதமிருக்கின்றன.

ஜனாதிபதித் தேரதல் 2020 ஜனவரியில் நடைபெறுமென்று அறுதியிட்டுக் கூற முடியும். ஆனால் பாராளுமன்றத் தேர்தலை அவ்வாறு ஒருபோதும் திட்டவட்டமாகக் கூறிவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்ற கையுடனும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது. அவ்வப்போது நிலவுகின்ற அரசியல் நிலைமையைப் பொறுத்தே இதனையெல்லாம் ஊகித்துக்கொள்ள முடியும்.

ஆட்சி மாற்றம் அண்மையில்தான் ஏற்பட்டதைப் போன்றே எண்ணத் தோன்றுகின்றது. 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதியன்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நிகழ்வு நேற்றைய தினமே நடத்தைப் போன்று இருக்கின்றது.

ஆனால் மூன்றரை வருட காலம் வேகமாக உருண்டோடிவிட்டது. இன்னும் ஒன்றரை வருட காலத்தில் ஜனாதிபதித் தேர்தலை நாடு எதிர்நோக்கப் போகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நாட்டில் பெருமளவான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும், எதிர்பார்ப்பும், நம்பிக்கைகளும் தோன்றியிருந்தன. இந்த எதிர்பார்ப்புகளுக்குக் காரணம் முன்னைய ஆட்சிக் காலத்தில் மக்கள் அனுபவித்த பெரும் துன்பங்களாகும். சர்வாதிகாரமும், அநீதியும் நிறைந்த அன்றைய ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுதான் கூடுதலான மக்களின் உள்ளத்தில் அப்போது உருவான மகிழ்ச்சிக்குக் காரணமாகும்.

இவர்களில் தமிழ் மக்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வேறானவையாகும். முன்னைய ஆட்சியின் பத்து வருட காலப் பகுதியில் வடக்கு , கிழக்கில் உள்ள தமிழர்கள் அனுபவித்த துன்பதுயரங்கள் விபரிக்க முடியாதவை. அச்சம் பீதி நிறைந்த வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட முடிந்ததென்பது அவர்களது பிரதான நிம்மதியாக இருந்தது.

அதேசமயம் உள்நாட்டு யுத்தத்துக்குக் காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கம் நியாயமான தீர்வொன்றை எவ்வாறெனினும் கண்டு விடுமென்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் கொண்டிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்களின் போது தமிழ் மக்களுக்கு அவ்வாறான உறுதிமொழிகளே அளிக்கப்பட்டிருந்தன. நல்லாட்சியில் இணைந்து கொண்டுள்ள இரு தலைவர்கள் மாத்திரமின்றி, வடக்கு கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் அம்மக்களுக்கு இவ்வாறான நம்பிக்கைகளையே அன்றைய வேளையில் வழங்கியிருந்தனர்.

வடக்கு, கிழக்குத் தமிழ் இனம் கடந்த அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்றுக்காகப் போராடி வருகின்றது. ஐரோப்பியர் இலங்கை மண்ணில் காலடி பதிப்பதற்கு முன்னர் இந்நாடு தனியொரு தேசமாக இருந்ததில்லை. கோட்டை இராச்சியம், மலையக இராச்சியம் என்பவற்றுடன் யாழ்ப்பாண இராச்சியமும் நிலவிய வேளையிலெயே ஐரோப்பியர்கள் (போர்த்துக்கேயர்) முதன் முதலில் இம்மண்ணில் காலடி பதித்தனர்.

அதன் பின்னர் ஒல்லாந்தரின் வருகையும், ஆங்கிலேயரின் வருகையும் இடம்பெற்றன. தமிழ் மன்னர்களாலும், சிங்கள மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட பல்வேறு நிலப்பிரதேசங்களும் ஆங்கிலேயரால் வீழ்த்தப்பட்டு ஒரே தேசமாகக்கொண்டு வரப்பட்டது. ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு விடுதலை பெறுவதற்கு முன்னதாகவே, இலங்கையில் வடக்கு - கிழக்குத் தமிழர்களின் அரசியல் உரிமைக் கோரிக்கை வலுவடையத் தொடங்கிவிட்டது எனக் கூறுவதே பொருத்தம்.

இலங்கையை 1815 ஆம் ஆண்டு முற்றுமுழுதாக தங்களது ஆட்சியின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயரால், 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய வேளையில் தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை வழங்க முடியாமல் போனமை துரதிர்ஷ்டம் ஆகும். இதன் காரணமாகவே வடக்கு, கிழக்குத் தமிழர்களின் சுதந்திரதாகம் இன்னும் தீராமல் தொடருகின்றது.

இலங்கை 1948இல் சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் தமிழினத்துக்கான தீர்வை வழங்க முடியவில்லை. ஆட்சிபீடமேறிய ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் தமிழினம் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதெனக் கூறுவதே பொருத்தமானதாகும்.

இவ்வாறான நிலைமையில் நாட்டில் 2015 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது. இனப் பிரச்சினைக்கு முடிவைக் காணக்கூடிய குறைந்த பட்சத் தீர்வேனும் ஏற்படுமென்றே தமிழர்கள் நம்பினர். அதுமாத்திரமின்றி முப்பது வருடத்துக்கு மேற்பட்ட காலமாகத் தொடர்ந்த யுத்தத்தினால் இழந்து போனவற்றை ஓரளவாவது ஈடுசெய்து கொள்ள முடியு​ெமனவும் மக்கள் நம்பினர்.

காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் என்றெல்லாம் தமிழர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்றரை வருடகாலம் கடந்துவிட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருட காலமே மீதமிருக்கின்றது.

இனிவரும் ஒன்றரை வருடகாலம் இலங்கையில் அரசியல் நெருக்கடிகள் நிறைந்ததாகும். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் பெரும் போராட்டமே நடத்திக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான அரசியல் யுத்தம் மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருக்கின்றது. இந்நெருக்கடிக்குள் அரசியல் தீர்வையிட்டு கவனம் செலுத்துவதற்கு யார் உள்ளனர் என்பதே இப்பொழுது எழுகின்ற வினா!


Add new comment

Or log in with...