சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணை தினம் அறிவிப்பு (UPDATE) | தினகரன்

சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணை தினம் அறிவிப்பு (UPDATE)

குற்றச்சாட்டுக்கு எதிராக சந்திமால் ICC யில் மேன்முறையீடு-Dinesh Chandimal Appeal Against Ball Tampering

 

 

பந்தின் அமைப்பை மாற்றிய குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலின் மேன்முறையீட்டு விசாரணையை நாளை (22) நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த விசாரணைகள், நாளையதினம் (22) சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) ஒழுக்காற்றுக் குழுத் தலைவரின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையை அடுத்து, அதற்கான முடிவு நாளைய தினம் அறிவிக்கப்படுமாயின், நாளை மறுதினம் (23) இடம்பெறவுள்ள மேற்கிந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால், விளையாடுவதற்கான வாய்ப்பு தொடர்பிலான முடிவும் உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 


குற்றச்சாட்டுக்கு எதிராக சந்திமால் ICC யில் மேன்முறையீடு (3.02pm)

 

மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்பு

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக, அவர் சர்வதேச கிரிக்கெட் சபையில் மேன்முறையீடு செய்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுலா தொடரில் கலந்து கொண்டுள்ள் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தொடரின் இரண்டாவது போட்டியில் பந்தின் அமைப்பை மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டதோடு, போட்டியின் நிறைவில், போட்டியின் நடுவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் குற்றமிழைத்ததாக கருதப்பட்டு, ஒரு போட்டி தடை மற்றும் போட்டிக்கான சம்பளம் முழுவதையும் (100%) செலுத்துமாறு பணிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் (19) இவ்வாறு அறிவிக்கப்பட்டதோடு, 48 மணித்தியால இடைவெளிக்குள் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு காணப்பட்டது அதற்கமைய, இன்றைய தினம் (21) குறித்த குற்றச்சாட்டை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் சபையில் மேன்முறையீடு செய்துள்ளார்.

குறித்த போட்டியின் போது, ஒரு கட்டத்தில் பந்தை பெற்றுக் கொள்ளும் தினேஷ் சந்திமால், தனது காற்சட்டையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்து, வாயினால் மென்று, அதன் பின்னர் வாயிலுள்ள உமிழ்நீரினால் பந்தில் தடவியதாக போட்டியின் நடுவர் ஜவாகல் ஶ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டி இடம்பெறும் சமயத்தில், ஆடுகளத்திலிருந்த நடுவர்களால் சந்திமால் மீது குறித்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு மேலதிக ஓட்டங்கள் 5 வழங்கப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டை தினேஷ் சந்திமால் மறுத்திருந்தார். இதனையடுத்து, போட்டியின் நிறைவில் வீடியோ ஆதாரங்கள் மூலம் போட்டியின் நடுவரால் விசாரணைகள் நடாத்தப்பட்டு அவருக்கு, ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான சம்பளம் முழுவதையும் அபராதமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

சந்திமால் தனது காற்சட்டையிலிருந்து ஏதோ ஒரு பொருளை வாயில் இட்டவுடன் தனது உமிழ்நீரை பந்தில் தடவி அதனை காற்சட்டையில் நன்றாக தடவி பந்துவீச்சாளரிடம் கையளிக்கும் ஒளிப்பட காட்சியொன்று மாத்திரமே தற்போதுள்ள ஒரேயொரு ஆதாரமாகும். ஆயினும் குறித்த குற்றச்சாட்டை முழுமையாக நிரூபிக்கும் உரிய வகையிலான வீடியோ மற்றும் நேரடியாக கண்ட ஆதாரங்கள் ICC இனால் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனாது இலங்கைக்கு சாதகமான விடயமாகும் என கூறலாம்.

சந்திமாலின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது, விசாரணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு சுயாதீன விசாரணையொன்றை ICC முன்னெடுக்கும்.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (23) சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், குறித்த விசாரணை அதற்கு பின்னர் இடம்பெறுமாயின் அல்லது விசாரணைகள் அதற்கு முன்னர் இடம்பெற்று சந்திமால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவாராயின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை தினேஷ் சந்திமால் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...