Friday, April 26, 2024
Home » பாசிக்குடாவில் 61 மில்லியன் டொலர் முதலீட்டில் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

பாசிக்குடாவில் 61 மில்லியன் டொலர் முதலீட்டில் ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தி திட்டம்

by damith
November 20, 2023 10:29 am 0 comment

இலங்கை கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியது. நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றார். அதனைத் தொடர்ந்து பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்புவதை நோக்காகக்கொண்டு வேலைத்திட்டங்களை பரந்த அடிப்படையில் ஆரம்பித்தார். அவ்வேலைத்திட்டங்கள் குறுகிய காலத்தில் பயனளிக்கத் தொடங்கின. அதனால் பொருளாதார நெருக்கடி காலத்தில் நிலவிய அசௌகரியங்களும் பாதிப்புக்களும் பெரும்பாலும் நீங்கியுள்ளன. நாடு மறுமலர்ச்சிப் பாதையில் நம்பிக்கையுடன் பிரவேசித்திருக்கிறது.

நாட்டில் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதையும், பொருளாதார நெருக்கடி மீண்டும் நாட்டில் ஏற்படுவதைத் தவிர்ப்பதையும் இலக்காகக் கொண்டு ஜனாதிபதி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். அவற்றில் முதலீடுகளின் வருகைக்கும் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் அவசியம். அதேநேரம் உள்நாட்டில் காணப்படும் வளங்களையும் நாட்டின் அபிவிருத்திக்காக உச்சளவில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

இலங்கையின் அமைவிடமும் சீதோஷண நிலையும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக் கூடியனவாக உள்ளன. எழில்மிகு கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள், வரலாற்று மரபுரிமைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கு இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும். அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முதலீடுகளின் வருகைக்கும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அவற்றின் ஊடாக ஒவ்வொரு வருடமும் 50 இலட்சம் உல்லாசப் பயணிகளை நாட்டுக்குள் வரவழைப்பது இலக்காகும்.

இந்நிலையில் கிழக்கில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கக்கூடிய தளங்களில் ஒன்றாக விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டமொன்று 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுடன் முன்னெடுக்கப்பட உள்ளது.

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மேம்பாட்டுக்கும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிக்கும் வகையில் இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தி கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’ என்று இத்திட்டத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருமான மங்கள செனரத் தெரிவித்திருக்கிறார்.

இத்திட்டம் குறித்து அவர் குறிப்பிடுகையில், “பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு பங்களிப்பது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அப்போதுதான் நாட்டு மக்களுக்கு வளமானதும் சுபீட்சம்மிக்கதுமான பொருளாதார வாழ்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும். அந்த வகையில் பாசிக்குடா பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட உள்ள ஒருங்கிணந்த சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 35 அறைகளையும் 250 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபத்தையும் உள்ளடக்கிய ஐந்து நட்சத்திர ஹோட்டல், ஆயுர்வேத சிகிச்சை நிலையம், சுற்றுலாப் பயணிகளுக்கான உணவுச்சாலை, 50 ஏக்கரில் 09 ஹோல்களை கொண்ட சர்வதேச தரத்திலான கொல்ப் மைதானம், பிரதேசத்திலுள்ள அரும்பொருட்களை உள்ளடக்கிய காகிதாதி அரும்பொருட்காட்சியகம், ஹெலிகொப்டர் தரையிறங்குவதற்கான தளம், 100 கைத்தொழில் இயந்திரங்களுடனான பேக் தொழிற்சாலை, 100 ஜுக்கி தையல் இயந்திரங்களை உள்ளடக்கிய ஆடைத்தொழிற்சாலை, விளையாட்டு மைதானம், சகல வசதிகளுடனான பங்களாக்கள், கொரிய தொழில்நுட்பத்துடனான பசுமை இல்ல பயிர்ச்செய்கை, மட்பாண்டத் தொழிற்சாலை, தண்ணீர் போத்தல் தொழிற்சாலை, இறால் வளர்ப்புப் பண்ணை, கோழிவளர்ப்பு பண்ணை ஆகியனவும் அமைக்கப்படும்.

அத்தோடு வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளின் நலன்களை முன்னிலைப்படுத்தி இங்கு தொழில்பயிற்சி நிலையமொன்று அமைக்கப்படும். ஜப்பான், கொரியா மொழிகள் பயிற்சிகள் அடங்கலாக முன்பள்ளி ஆசிரியர் கற்கைநெறிகளும் இங்கு இலவசமாகக் கற்றுக்கொடுக்கப்படும். அத்தோடு 25 மெகா வார்ட் சூரியசக்தி மின்நிலையமொன்றும் நிறுவப்படும். அவற்றின் மின்சாரம் இக்கருத்திட்டத்தின் கீழ் இங்கு அமைக்கப்படும் நான்கு தொழிற்சாலைகளுக்கும் இங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும். ஏனைய 21 மெகாவார்ட் மின்சாரமும் இலங்கை மின்சார சபையின் பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த அபிவிருத்தித் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது முதல் 18 மாதங்களில் நிறைவு செய்யப்படும். இக்கருத்திட்டம் முழுமையாக செயப்படும் போது 2000 பேர் நேரடி தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதோடு 5000 குடும்பங்கள் பிரதிபலன்களை அடைந்து கொள்ளக்கூடியதாகவும் இருக்கும்’ என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் இந்த ஒருங்கிணைந்த சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எடுத்துக்கூறப்பட்டுள்ளது. இச்சமயம் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர். ஜனாதிபதியின் ஆதரவுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டிய முகாமைத்துவப் பணிப்பாளர் மங்கள செனரத், மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி அளிக்கவென 2026 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு தொழிற்சாலைகள் இக்கருத்திட்டத்தினுள் அமைக்கப்படும்’ எனவும் கூறினார்.

முதலீடுகளை கவர்ந்திழுக்கும் வகையிலும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையிலும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனைகளும் முன்மொழிவுகளும் இக்கருத்திட்டத்திற்கு பக்கபலமாக அமையும். அது மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கும் தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்கும் பாரிய உந்துசக்தியாக இருக்கும்.

மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT