இந்தோனேசிய படகு விபத்து: மாயமானோர் 190ஆக உயர்வு | தினகரன்

இந்தோனேசிய படகு விபத்து: மாயமானோர் 190ஆக உயர்வு

இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவிலுள்ள டோபா ஏரியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல்போனோர் எண்ணிக்கை 190க்கும் அதிகம் என தற்போது நம்பப்படுகிறது.

முன்னதாக 130 பேரே காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையிலேயே அந்த எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டதை விடவும் அந்த படகில் மூன்று மடங்கு பயணிகள் ஏற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் நோன்புப் பெருநாளை ஒட்டி சுற்றுலா பயணிகள் நிரப்பி இருந்த நேரத்திலேயே மோசமான காலநிலை காரணமாக இந்த படகு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் மூழ்கிய படகுக்குள் சிக்கியிருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

விபத்து இடம்பெற்று சில மணி நேரத்திற்குள் மாத்திரம் 18 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டதாகவும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இந்தோனேசியாவின் தேசிய தேடுதல் மற்றும் மீட்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

படகை இயக்கிவர்கள் பயணிகளுக்கு அனுமதிச் சீட்டுகளை வழங்காததால் அதில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிய முடியாதிருப்பதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் படகுக்கு என்ன ஆனது என்ற செய்தி கிடைக்கும் வரை அந்த பகுதியில் கடந்த மூன்று தினங்களாக காத்துள்ளனர்.


Add new comment

Or log in with...