கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு | தினகரன்

கிழக்கை அச்சுறுத்தும் டெங்கு

நாட்டில் ஆபத்தான நோயாக மாறியிருக்கின்ற டெங்கு நோய் கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை அச்சுறுத்தி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் இந்த வருடத்தில் இது வரைக்குமான காலப்பகுதியில் 4400 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 2900 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

டெங்கு நோயாளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக இலங்கையில் மேல் மாகாணம் உள்ளது. அதற்கடுத்ததாக இரண்டாவது இடத்தில் கிழக்கு மாகாணம் உள்ளது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2900 பேர் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் 436 பேரும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு சுகாதாரப்பிரிவுகளான அம்பாறை சுகாதாரப் பிரிவில் 65 பேரும், கல்முனை சுகாதாரப் பிரிவில் 937 பேரும் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 7 பேர் டெங்கினால் மரணமடைந்துள்ளனர். இம்மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் கூடுதலான டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலே காணப்படுகின்றனர்.

இப்பிரதேசங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது.இப்பிரதேசங்களில் சராசரியாக 300 டெங்கு நோயாளர்கள் இணம்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயாளர் ஒருவர் எந்தவொரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர் வசிக்கும் பிரதேச சுகாதார வைத்தியர் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.முருகானந்தன் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரைக்கும் கிழக்கு மாகாணத்தில் 4400 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2900 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் 436 பேரும் அம்பாறை மாவட்டத்தில் இரண்டு சுகாதாரப்பிரிவுகளான அம்பாறை சுகாதார பிரிவில் 65 பேரும், கல்முனை சுகாதார பிரிவில் 937 பேரும் இனம் காணப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 7 பேர் டெங்கினால் மரணமடைந்துள்ளனர்" என்ற தகவலை வெளியிட்டார்.

"அதில் இருவர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளியே டெங்கு தொற்றுக்கு இலக்காகி இங்கு வந்து மரணமடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்த வரைக்கும் டெங்கு நோயாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும். எதிர்வரும் காலங்களில் டெங்கினால் ஏற்படும் மரணங்களை இல்லாமல் செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண ஆளுனர் புகை விசிறும் நடவடிக்கைக்காக ஒரு மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டினை செய்துள்ளார். ஆனால் பொதுமக்கள் எங்களுக்கு டெங்கை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு கூடுதலாக கிடைக்கும் பட்சத்தில் டெங்கை இலகுவாக கட்டுப்படுத்த முடியும்" என்றார் அவர்.

நுளம்பைப் பொறுத்த வரைக்கும் நுளம்பின் வாழக்கை வட்டம் 7 தொடக்கம் 10 நாட்களாகும்.

நுளம்பு தண்ணீர் தேங்கியிருக்கும் பாத்திரங்களில் முட்டையிடுகின்றது. அந்த முட்டையை பொரித்து சிறு குடம்பியாகி நுளம்பாக வரும் போது அந்த நுளம்பு மனிதரைக் குத்தும்.

அவ்வாறு குத்தும் போது அந்த நோய் காவப்படுகின்றது. நீர்த்தங்கியிருக்கும் சிறு பாத்திரங்கள், சிரட்டைகள் என்பவற்றில் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒரு நாளாவது அதனை அகற்ற வேண்டும்.

மழை பெய்யும் போது அல்லது வீட்டில் பூமரங்களுக்கு தண்ணீர் விடும் போது, குளிக்கும் போது அல்லது மலசலகூடம் மற்றும் நீர் நிறைந்திருக்கும் இடங்களிலே சிறிய சிறிய பாத்திரங்களிலே இருக்கின்ற சிறிதளவு நீர் டெங்கு நுளம்பை பெருக்குவதற்கு போதுமானதாகும்.

உதாரணமாக குளிர்சாதனப் பெட்டியின் பின்னாலுள்ள மட்டையில் காணப்படும் தண்ணீரே டெங்கு நுளம்பை கொண்டு வரப் போதுமானதாகும்.

நுளம்புக் குடம்பிகள் காணப்படும் சட்டிகள், பாத்திரங்கள் என்பவற்றை பொதுமக்கள் துப்புரவு செய்ய வேண்டும். அதனை அகற்ற வேண்டும்.

ஐஸ் கிறீம் சாப்பிடும் போது அங்கு வரும் வெற்றுக் கப் மற்றும் இளநீர் வெற்றுக் கோம்பைகளை தண்ணீர் தேங்காத வகையில் மூடி வைக்க வேண்டும். அல்லது அதனை எரிக்க வேண்டும். அவற்றை நீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புகை விசிற வரும் போது, வீட்டை பரிசோதனை செய்ய வரும் போது பொது மக்கள் தமது வீடுகளை திறந்து உத்தியோகத்தர்கள் தமது கடமையைச் செய்வதற்கு இடமளிக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். சிலர் தடையாகவும் இருந்திருக்கின்றார்கள்.

வீட்டை மூடி விட்டுச் சென்றால் பரிசோதனை செய்ய முடியாது. வீட்டில் ஒருவராவது இருந்து அங்கு பரிசோதனை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தேவையற்ற கிணறுகள், தேவையற்ற குழாய்க்கிணறுகளை மூடி விட வேண்டும். நுளம்பு அதிகமாக குழாய்க்கிணறுகளில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் டெங்கை ஒழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பைத் தர வேண்டும்.டெங்கை கட்டுப்படுத்த கிழக்கு மாகாண ஆளுனர் தனது முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதுடன் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தனது அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்" எனவும் அவர் தெரிவித்தார்.

திறக்கப்பட்ட கிணறுகள் இருக்கும் போது கிணறுகளை இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். வலைகளை பயன் படுத்தி அந்த கிணறுகளை மூடி விட முடியும். இது இலகுவானதாகும். இதனை நமது மக்கள் கவனம் செலுத்துவதில்;லை என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் திருமதி கிறேஸ் நவரட்ணராஜா தெரிவிக்கின்றார்.

கிணறுகளில் மீன்களை விட முடியும். மீன் இப்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல சுகாதர வைத்தியர் அலுவலகத்திலும் பெற்;றுக் கொள்ள முடியும்.

பத்து அல்லது 12 மீன்களை கிணற்றுக்குள் போடும் போது இந்த டெங்கு குடம்பிகளை சாப்பிடும்.

எங்கு பார்த்தாலும் ஐஸ் கிறீம் வெற்றுக் கப்களை காணக் கூடியதாக உள்ளது.

செங்கலடி சுகாதார அலுவலகப்பிரிவில் மாத்திரம் எமது செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 4 இலட்சம் ஐஸ் கிறீம் வெற்றுக் கப்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டுள்ளன.

ஐஸ் கிறீமை சாப்பிட்டு விட்டு அதனுடைய கப்பை சரியான இடத்தில் போட பழகிக் கொள்ள வேண்டும். தினமும் இதனை சேரிக்க முடியாது.

வெற்று தண்ணீர் போத்தல்கள், இளணி குரும்பைகள், குளிர்பானங்கள் என்பவற்றை குடித்து விட்டு அதன் கழிவுகைளயும் போத்தல்களையும் வடிகானுக்குள் வீசி விட்டு செல்கின்றனர். இவற்றை பொது மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொது மக்கள் இதில் முழுமையான ஒத்துழைப்புக்களை தந்தால் டெங்கை குறைத்து விட முடியும்.

வணக்கஸ்தளங்கள், அரச அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் இவற்றை நாங்கள் துப்பரவாகவும் டெங்கு அற்ற இடமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். டெங்கு பரிசோதனைக் குழுக்கள் அங்கு சென்று டெங்கை கண்டு பிடிக்கும் அளவுக்கு நமது நிலை இருக்கின்றது.

திணைக்களத் தலைவர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால் நாங்கள் எப்போது பரிசோதனைக்கு சென்றாலும் அங்கு டெங்கு நுளம்பு குடம்பிகளை காணக் கூடியதாக உள்ளது. ஒவ்வொருவரும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமாகும்.ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களிலும் வட்டார ரீதியாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தந்த வட்டாரத்திலுள்ள தொண்டு நிறுவனங்கள் விளையாட்டுக் கழகங்களை அழைத்து அவர்களையும் பயன்படுத்தி இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்தால் அதுவும் உதவியாக இருக்கும்.

அந்தந்த வட்டார பிரதிநிதிகளுக்கு இதில் பாரிய பொறுப்பு இருக்கின்றது. அவர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இன்னுமொருவரை டெங்கினால் நாம் இழக்கக் கூடாது என்பதை கவனமாக கொண்டு நாம் செயற்பட வேண்டும்.டெங்கை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார திணைக்களம் பிராந்திய சுகாதார அலுவலகம் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அலுவலகங்கள் உள்ளுராட்சி மன்றங்கள் என பலரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுத்து அதிகாரிகளுக்கு அpறவுறுத்தல்களை வழங்கி வருகின்றார்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் ஆகியோரது தலைமையில் பாரிய டெங்கு விழிப்புணர்வு மற்றும் வீடு வீடுகள் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோன்று பாதுகாப்புத் தரப்பினரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்பு, தனிநபர் பொறுப்பு இவற்றை உணர்ந்து செயற்பட்டால் டெங்கின் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள முடியும்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...