மக்களின் நலன்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை | தினகரன்

மக்களின் நலன்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த அடிப்படையில் தற்போது தனியார் வைத்தியசாலை சேவைகளுக்கான வற் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து இருக்கின்றது.

இது தொடர்பான திட்டத்தை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் நேற்றுமுன்தினம் தெரிவித்தார். இத்திட்டத்திற்கு ஏற்ப எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் தனியார் வைத்தியசாலைச் சேவைகளுக்கான வற் வரி நீக்கம் அமுலுக்கு வரவுள்ளது.

வரி மறுசீரமைப்பின் ஊடாக இந்த வற் வரி கடந்த 2016 ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் தனியார் வைத்தியசாலை சேவைகளும் உள்ளடக்கப்பட்டன. என்றாலும் இந்த வரித் திட்டத்திற்குள் தனியார் வைத்தியசாலைச் சேவை உள்ளடக்கப்பட்டமைக்கு மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் ஏற்பட்டன. அதன் காரணத்தினால் இது தொடர்பில் கவனம் செலுத்தி வந்த அரசாங்கம் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தற்போது இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருக்கின்றது. இந்நடவடிக்கை நாட்டு மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அதேநேரம் இந்த நல்லாட்சி அரசாங்கம் எரிபொருட்கள் விலையேற்றத்தை அண்மையில் மேற்கொண்டது. இவ்விலையேற்றத்தில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன உள்ளடக்கப்பட்டன. இருந்த போதிலும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்களும் ஆட்சேபனைகளும் வெளிப்பட்டன. குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கூட பகிஷ்கரித்தனர். ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். இவ்விடயத்தில் கவனம் செலுத்திய அரசாங்கம், எரிபொருள் விலையேற்றத்தோடு அறிவித்திருந்த இரு மாதங்களுக்கு ஒரு தடவை விலை சூத்திரப்படி எரிபொருட்களின் விலைகள் கூடிக்குறையும் என்ற அறிவிப்புக்கும் அப்பால் சென்று மண்ணெண்ணெயின் விலையை லீற்றருக்கு எழுபது ரூபாவாகக் குறைத்துள்ளது. அதாவது லீற்றருக்கு ரூபா 30 குறைத்துள்ளது. இதுவும் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையேயாகும்.

இவை மாத்திரமல்லாமல் 2015 ஜனவரி 08 ஆம் திகதி பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அன்று தொடக்கம் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து ஒவ்வொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது. இது மிகவும் தெளிவானது.

அந்தவகையில் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்புககான 19வது திருத்தத்தை கொண்டு வந்தது. இது இந்நாட்டு மக்கள் பெற்றுக் கொண்ட பாரிய வெற்றியாகும். இதனூடாக ஜனநாயகம் தழைத்தோங்கி உள்ளது. இந்த திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் குற்றச்செயல்களினால் பாதிக்கப்படுபவர்களையும், சாட்சிகளையும் சட்ட ரீதியாகப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தகவலறியும் சட்டத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி அரசாங்க சேவையில் பொதுமக்களும் பங்குபற்றக் கூடிய நிலைமையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக அரச சேவையும் துரிதமடையும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் இருந்த காணிகளைக் கட்டம் கட்டமாக உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து முன்னெடுக்கப்பட்டவையாகும்.அவற்றில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது.

என்றாலும் கடந்த ஆட்சிக்காலத்தில் மண்ணெண்ணெய் மானியம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக சிலாபத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தமது பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும் ஓய்வூதியம் தேவையில்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் நடாத்தியதற்காக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அத்தோடு கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் அச்சம் பீதி தலை விரித்தாடியது. யுத்தம் முடிந்து பல வருடங்கள் கடந்த பின்னரும் தலைநகரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரின் சோதனைச்சாவடிகள் காணப்பட்டன. அக்காலப்பகுதியில் இன்று போல் சுதந்திரமாக நடமாட முடியாத நிலைமை காணப்பட்டது.

ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டில் காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் இடையில் நாட்டில் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வித்தியாசம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்தளவுக்கு நல்லாட்சி அரசாங்கம் மக்கள் நலன்களை முன்னிறுத்தி ஒவ்வொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

ஆகவே அவ்வேலைத்திட்டங்களைப் பலப்படுத்தவும்,தொடந்தும் முன்னெடுக்கவும் நாட்டு மக்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்குவதில் உறுதியாக உள்ளனர். 2015 முற்பட்ட யுகம் மீண்டும் நாட்டில் ஏற்படுவதை அவர்கள் சிறிதளவேனும் விரும்பவில்லை.


Add new comment

Or log in with...