சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்க டிரம்ப் திட்டம் | தினகரன்

சீன பொருட்கள் மீது அதிக வரி விதிக்க டிரம்ப் திட்டம்

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் போர் வலுத்துவரும் நிலையில் சீனாவின் 200 பில்லியன் இறக்குமதி பொருட்களுக்கு மேலதிக வரி விதிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனா தனது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளாவிட்டால் இந்த பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

புதிய வரி விதிப்பை அமுல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை என்று கண்டறியுமாறு தனது வர்த்தக ஆலோசகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு மோதலை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதோடு, உலக பங்குச்சந்தை வேகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அமெரிக்கா மிரட்டலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இருக்கும் சீனா, முழுமையான ஒரு வர்த்தகப் போர் ஏற்படும் வாய்ப்பு குறித்து அச்சம் வெளிட்டுள்ளது.

அமெரிக்காவுடனான சமநிலையற்ற வர்த்தகத்தின் மூலம் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்டி வந்ததாக சீனா மீது டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க இறக்குமதி வரியை பயன்படுத்தப்போவதாக டிரம்ப் 2016இல் தனது தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார்.

எனினும் இந்த வரிகளின் மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்றும் சில வர்த்தகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் பல பொருளாதார நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டிரம்பின் எச்சரிக்கையை அடுத்து ஆசிய பங்குச் சந்தைகள் நேற்று சரிவை சந்தித்ததோடு, ஏற்கனவே உலக பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது.

50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது 25 சதவீதம் வரிவிதிப்பை கடந்த வாரத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலடியாக 50 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான 650 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது இதே போன்ற கூடுதல் வரிவிதிப்பை சீனாவும் அறிவித்தது.

இது தொடர்பாக திங்கட்கிழமையன்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “தனது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள சீனா மறுத்தால், இந்த புதிய வரிவிதிப்பு அமுலுக்கு வரும்” என்று குறிப்பிட்டார்.

“மேலும், அமெரிக்க பொருட்கள் மீது தான் அறிவித்த புதிய வரிவிதிப்பை சீனா அமுல்படுத்தினாலும், அமெரிக்கா சீன இறக்குமதி பொருட்கள் மீது கூடுதல் வரிவிதிப்பை அமுல்படுத்தும்” என்று அவர் மேலும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

“அமெரிக்க பொருட்கள் மீது மீண்டும் சீனா வரிவிதிப்பு மேற்கொண்டால், 200 பில்லியன் டொலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்படும். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக உறவு நியாயமான முறையில் இருத்தல் அவசியம்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தினால், அந்நாட்டுடன் உள்ள அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் செல்லாமல் ஆகிவிடும் என சீனாவின் அரசு ஊடகமான சின்ஹூவா எச்சரித்தது.

சீனாவின் லியோ ஹ மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ரோஸ், இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதனையடுத்து, சீனா பல நாடுகளிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டது.

சீன பொருட்கள் மீது 50 பில்லியன் டொலர்கள் வரை அதிக கட்டணங்கள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா அச்சுறுத்தியதையடுத்து வில்பர் ரொஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், உருக்கு மற்றும் அலுமினியம் இறக்குமதிகளுக்கு அமெரிக்கா கட்டணங்கள் விதித்தது ஜி7 நாடுகளை கோபப்படுத்தி உள்ளது.

மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் உருக்கு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதித்தது.


Add new comment

Or log in with...