Thursday, March 28, 2024
Home » 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் சுமார் 2265 பேர் பாதிப்பு; இருவர் பலி

25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் சுமார் 2265 பேர் பாதிப்பு; இருவர் பலி

by damith
November 20, 2023 9:54 am 0 comment

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஆறு பிதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கெபோய்கனே, பிங்கிரிய, சிலாபம் , ரஸ்நாயக்கபுர, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறிதளவு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, நாத்தாண்டிய பிரதேச செயலகப் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 38 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரும், முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் 13 கிராம சேவகர் பிரிவில் 388 குடும்பங்களைச் சேர்ந்த 1408 பேரும், மஹாவெவ பிரதேச செயலகப் பிரிவில் 1 கிராம சேவகர் பிரிவில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 574 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகப் பிரிவில் 4 கிராம சேவகர் பிரிவில் 28 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெள்ள அனர்த்தம் காரணமாக இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாத்தாண்டிய மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒவ்வொரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெள்ளம் காரணமாக முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் நான்கு வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT