வாழ்வு சிதைக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அவலத்தில் அகதிகள் | தினகரன்

வாழ்வு சிதைக்கப்பட்டவர்களாக உலகெங்கும் அவலத்தில் அகதிகள்

உள்ளக் குமுறலை உலகம் உணரும் நாள் எப்போது?

உலக அகதிகள் தினம் வருடம் தோறும் ஜுன் 20ம் திகதி நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் (Africa Refugee Day) நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது 2000ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (United Nations General Assembly) சிறப்புத் தீர்மானமொன்றின்படி, ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும், பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்து வரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.

உறவுகளை இழந்த மனிதன் அநாதை,சொந்த தேசத்தை இழந்தவன் அகதி எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. அகதி என்பது தனது நாட்டில் பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாத ஒருவரைக் குறிக்கும். சொந்த நாட்டில் இடம்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக இருப்பிடங்களை விட்டு வெளியேறுபவர்கள் அகதிகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர். தன்னை அகதியாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர், அகதி அந்தஸ்து கோருபவர் எனப்படுகின்றார்.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும், அவர்களின் உரிமைகளையும், புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4, 1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதி செய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர்.

அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் (United Nations High Commissioner for Refugees _UNHCR) ஆகும். அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகம் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.

14 டிசம்பர் 1950இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம்,சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954இலும் 1981இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக ஒரு காலத்தில் இருந்தது. அந்நிலைமை இன்று தணிந்துள்ள போதிலும், சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத நிலையில் இன்னும் பலர் உள்ளனர். இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டின் பல இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அகதிகளின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே அகதிகள் தினம் ஆகும். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்க்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக்குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஆனால் உலகம் இதனை உணர்ந்ததா என்பது கேள்விக்குறியே! அழகான இச்சிறு கோளைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களும் ஒழிந்து, உலகமெங்கும் சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே.

புன்னியாமீன்...


Add new comment

Or log in with...