18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம் | தினகரன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3வது நீதிபதியாக எஸ்.விமலா நியமனம்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்க மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த ஆண்டு தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்.

இதையடுத்து தங்க தமிழ்செல்வன், வி.வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ப.தனபால் கடந்த 2017 செப்டம்பர் 18ம் திகதி உத்தரவிட்டார். இந்தத் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 14-ம் திகதி தீர்ப்பளித்தது. பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதியும் செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

இதையடுத்து இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எஸ்.விமலாவை நியமித்து மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

கடந்த 1957ல் பிறந்த நீதிபதி எஸ்.விமலா முனைவர் பட்டம் பெற்றவர். 1983ல் கடலூர் மற்றும் சிதம்பரத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார். கடந்த 2002ல் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2011ல் நியமிக்கப்பட்டு 2013ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தில் பெண்கள் முன்னேற்றம், கைதிகள் மறுவாழ்வு, விபத்து இழப்பீடு, விவாகரத்து போன்ற வழக்குகளில் பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை நீதிபதி எஸ்.விமலா வழங்கியுள்ளார். பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.


Add new comment

Or log in with...