காஷ்மீரில் பா.ஜ.க – பிடிபி கூட்டணி முறிவு | தினகரன்

காஷ்மீரில் பா.ஜ.க – பிடிபி கூட்டணி முறிவு

காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க திரும்ப பெற்று கொண்டது.

காஷ்மீரில் பிடிபி - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதல்வராக பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி பதவி வகித்து வந்தார். பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏக்களும் பா.ஜ.கவுக்கு 25 எம்எல்ஏவும் உள்ளனர்.

இந்நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே பல விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மாநில பா.ஜ.க தலைவர், துணை முதல்வர், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பிடிபி கட்சியுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.

மேலும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்று கொள்வதாகவும் கவர்னரிடம் கடிதம் அளித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜ.கவின் ராம் மாதவ் நிருபர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். சமீப கால நிகழ்வுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

மாநிலத்தில் பேச்சு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி திட்டஙகள், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் வேறுபாடு உள்ளது. பத்திரிகையாளர் புஹாரி கொலை கண்டனத்திற்குரியது. இதில் பிடிபி கட்சியுடன் கூட்டணியை தொடர்வது ஏற்று கொள்ள தக்கதல்ல என்ற முடிவுக்கு வந்தோம்.

இதனால் கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம். மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சி நிதியை மத்திய அரசு வழங்கி வந்தது. இவ்வாறு அவர் கூறினார்.


Add new comment

Or log in with...