நிலத்தகராறில் பெண்ணின் மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது | தினகரன்

நிலத்தகராறில் பெண்ணின் மார்பில் எட்டி உதைத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

நிலத்தகராறில் பெண்ணை காலால் எட்டி அவரது மார்பின் மீது உதைத்த ஊராட்சி மன்ற தலைவரை நேற்று தெலுங்கானா பொலிஸார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் கவுராரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (60). இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன் தர்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கோபிக்கு சொந்தமாக உள்ள ஒரு வீட்டை ரூ. 33.72 இலட்சத்திற்கு வாங்கி உள்ளார். இதற்கான பத்திரமும் ராஜியிடம் உள்ளது.

சில மாதங்களில் வீட்டை காலி செய்வதாக கூறிய ஊராட்சி மன்ற தலைவர் கோபி திடீரென அந்த வீட்டை மேலும் கூடுதலாக 50 இலட்சம் ரூபா கொடுத்தால்தான் காலி செய்வேன் என கூறி விட்டார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

இதனால் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கோபிக்கும் ராஜி குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜி குடும்பத்தினர் மீண்டும் கோபியிடம் சென்று தங்களுக்கு விற்ற வீட்டை காலி செய்து கொடுக்கும்படி கேட்டனர். இதற்கு கோபி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜி, தனது செருப்பால் கோபியை அடித்துள்ளார். இதனால் கோபமுற்ற கோபி ஒரு பெண் என்றும் பாராமல் ராஜியை அவரது மார்பில் பலமாக உதைத்தார்.

இதில் ராஜி எகிறி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜியின் உறவினர்கள் கோபியை அடித்து உதைத்ததோடு அந்த வீட்டையும் அடித்து நொறுக்கினர்.

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி பெண்ணை காலால் உதைத்த ஊராட்சி மன்ற தலைவர் கோபியை நேற்று காலை கைது செய்தனர். கோபியின் அநாகரீகமான செயலை காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பாஜகவினர் மற்றும் பல்வேறு மகளிர் சங்கத்தினர் கண்டித்தனர்.

இது தொடர்பாக நேற்று இப்பகுதியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.


Add new comment

Or log in with...