Friday, March 29, 2024
Home » இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும்

இலங்கையர் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவாகும்

காலி, மாகால்ல ஹச்சிவத்த பள்ளிவாசலை தொல்பொருள் மரபுரிமை இடமாக அடையாளப்படுத்தும் நிகழ்வில் அமைச்சர் மனுஷ நாணயக்கார

by damith
November 20, 2023 12:42 pm 0 comment

இலங்கையர் என்ற ரீதியில், நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டின் அபிவிருத்தி மற்றும் தேசிய ஐக்கியத்தை எவரேனும் எதிர்பார்ப்பார்களாயின் ஒருவரையொருவர் குற்றம் சாட்டாது, அதற்காக ஆரம்பத்தை தன்னிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காலி, மாகால்ல ஹச்சிவத்த பள்ளிவாசலை (காலி மக்குலுவ பாலத்திற்கு அருகாமையில்) தொல்பொருள் பெறுமதிமிக்க மரபுரிமை இடமாக அடையாளப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று நேற்று (19) உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசலை மரபுரிமையாக பெயரிட்டு தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் தொடக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், வரலாற்றை விளக்கும் பலகையையும் அமைச்சர் திரைநீக்கம் செய்து வைத்தார். இது தொடர்பான தொல்பொருள் ஆய்வுகளை விரைவில் நிறைவு செய்யுமாறு, தொல்பொருள் திணைக்களத்தை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

“தேசிய ஒற்றுமையை நீங்கள் விரும்பினால், அதனை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள். நான் என்னில் இருந்து ஆரம்பிப்பது என்றால் எப்பொழுதும் பிறரைக் குற்றம் சொல்ல வேண்டிய அவசிய நிலை இருக்காது. நாம் ஒன்றிணைந்து இலங்கையர் என்ற ரீதியில் மனிதர்களாக ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிறரைப் பற்றி அறிந்து கொள்வதுதான் கூட்டு நல்லிணக்கத்துடன் கூடிய நாட்டிற்கான அடிப்படை. ஒரு நாட்டில் வாழும் சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ மற்றவரை நேசிக்கக் கூடியவர்கள் அந்த நாட்டின் கண்ணியத்திற்கும் பெருமைக்கும், தேசப்பாதுகாப்பிற்கும் உறுதுணையாக இருப்பார்கள். அப்படிப்பட்ட நாடே வலிமையான நாடு என்று நாம் சொல்கிறோம். கடந்த காலங்களில் அரசியல், சமூக மற்றும் மத மற்றும் கலசாரரீதியாக மக்கள் வேறுபட்டவர்களாக இருந்திருக்கலாம். வெவ்வேறு மக்கள் வெவ்வேறு மரபுகளை மதங்களுக்குள் கொண்டுவர முயற்சித்தனர். சிலர் மாற்றங்களை மேற்கொள்ள முயன்றனர். சிலர் புதிய கலாசாரப் போக்குகளுக்குள் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயன்றனர்.

இதற்கு மத்தியில் மக்கள் வீதியில் இறங்கி வாக்களித்து போராடி அந்த மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு மாற்றத்திற்கும் செயற்பாடு தேவை. சற்று யோசித்துப் பாருங்கள், உங்கள் உடலை மாற்ற வேண்டுமானால் உங்கள் தோரணையை மாற்ற வேண்டும். அந்த மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி ஜனாதிபதி தலைமையில் அந்தக் எண்ணக்கருவை ஆரம்பித்தோம். முறைமை மாற்றத்திற்கு நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, இந்தப் பணியை ‘என்னில் இருந்து’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பித்தோம். அதுவரை இருந்த சீர்குலைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றும் நடவடிக்கை என்னில் இருந்து தொடங்குகிறது. நானே ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் பொறுப்பேற்ற அனைவரும் இதனை ஆரம்பித்தார்கள். ஜனாதிபதி அவருடன் ஆரம்பித்தார்.

அதனால்தான் இன்று ஒரு நாடு என்ற ரீதியில் தற்போது பொருளாதார ரீதியில் சுதந்திரமாக சுவாசிக்க முடிகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நீங்கள் சுதந்திரமாக பொருளாதார ரீதியில் சுவாசிப்பீர்கள். இது குறித்து சிந்தித்துப் பாருங்கள். எனது தத்துவம் மனிதநேயம். அதனையே நம்புகின்றேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நமது நாடு 75 ஆண்டுகளாக வறிய நாடாக இருப்பதற்கு ஒரு காரணம் இனவெறிக் கலவரம்தான் அல்லது ஒரு குழு ஆயுதம் ஏந்தியமை. மக்கள் போராட வேண்டும். விலங்குகளாக அல்ல, மனிதர்களாக போராட வேண்டும்.

தற்போது அரசியல் இலாப நோக்கில் சிலர் இஸ்ரேல்_-பலஸ்தீன பிரச்சினையை இனவாத கலவரமாகக் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். வரலாற்றின் முந்திய தவறு மீண்டும் நிகழாமல் இருக்க என்னில் இருந்து எப்படித் தொடங்க வேண்டும் என்று யோசித்தேன். இன்று நாங்கள் எனது சிந்தனையின் ஒரு விளைவாக பங்கேற்கிறோம். அதற்கு எனக்கு வழிகாட்டிய அம்ஹர் மௌலவி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹச்சிவத்த பழமையான வழிபாட்டுத்தலம் மூலம் இலங்கையர்களாகிய நாம் கடந்த காலத்திலிருந்து எம்மிடையே இருந்த சகவாழ்வின் நெருக்கத்தையும் உணர்திறனையும் தொன்மையாக உலகுக்கு எடுத்துரைக்கிறோம்.

எனவே தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், எங்களின் இந்த தொன்மையான பாரம்பரியத்தை விரைவில் உலகுக்கு எடுத்துரைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் என்னில் ஆரம்பித்தேன். நீங்களே தொடங்குங்கள். நீங்கள் தேசிய ஒற்றுமையை விரும்பினால், அது உங்களிடமிருந்து ஆரம்பமாகட்டும். நீங்கள் ஒரு வளர்ச்சிக்கண்ட நாட்டை விரும்பினால், நீங்களே இதனை தொடங்குங்கள்” என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT