Friday, April 19, 2024
Home » ஏறாவூர் பிரதேச செயலக பதிவாளர் பிரிவு சேவைகளை ஆரம்பிக்கவும்

ஏறாவூர் பிரதேச செயலக பதிவாளர் பிரிவு சேவைகளை ஆரம்பிக்கவும்

by damith
November 20, 2023 5:56 am 0 comment

ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளமை குறித்து,

பிரதமரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள பதிவாளர் பிரிவுகளில் பிறப்பு இறப்பு மற்றும் விவாக விவாகரத்து சான்றிதழ்கள் விரைவாகவும் ஒன்லைன் ஊடாகவும் வழங்கும் முறைமைகள் சுமுகமாக இடம்பெறுகின்றன.

இந்நிலையில், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சுமார் ஐந்து மாத காலமாக Local Government Wifi (LGN Wifi) செயலிழந்துள்ளது.இதே பிரச்சினை செங்கலடி பிரதேச செயலகத்திலும் ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

இது,பிரதேச மக்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலையற்ற இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்லுகின்ற நிலை அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் காலதாமதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால், குறித்த பிரதேச மக்கள் மட்டக்களப்பு கச்சேரிக்கு சென்று தங்களது பதிவுப்பிரதிகளை எடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.இந்த விடயமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் இதுபற்றி அறிவித்துள்ளதாக சுபைர் குறிப்பிட்டார்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT