பிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்! | தினகரன்

பிறை பார்த்தல்; அறிவியல் கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்!

 

வளிமண்டலவியல் திணைக்களமும் உதவியாக அமையும்

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பிறை தொடர்பான சர்ச்சையும், நெருக்கடிகளும் அண்மைக் காலமாக முடிவின்றி தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக ரமழான் மற்றும் நோன்புப் பெருநாள் (ஷவ்வால்) தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பான இந்த சர்ச்சைகள் வருடா வருடம் தலைதூக்குகின்றன. அவை முரண்பாடுகளாவும் பிளவுகளாகவும் சமூகத்தில் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. அதிலும் இம்முறை நோன்புப் பெருநாள் பிறையைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட சர்ச்சை வேதனை மிக்கதாக அமைந்தது.

அதன் காரணத்தினால் பிறையைத் தீர்மானிப்பதில் நிலவி வருகின்ற சர்ச்சைகளும், நெருக்கடிகளும் தொடர்ந்தும் நீடிக்க இடமளிக்கலாகாது. பிறை விவகாரம் இஸ்லாத்தின் நிழலில் அறிவியல்பூர்வமாக அணுகப்பட வேண்டும். இது காலத்தின் அவசியத் தேவையாகும்.

அதேநேரம் இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்களின் காலம் முதல் கி.பி, 1924 வரையும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் ரமழான் மற்றும் நோன்புப் பெருநாள் தலைப்பிறை தீர்மானிக்கப்பட்டு வந்த ஒழுங்கும் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும். அதாவது நபி(ஸல்) அவர்களுக்கு பின்வந்த நாற்பெரும் கலீபாக்கள், உமையாக்கள், அப்பாஸியாக்கள் மற்றும் உதுமானிய ஆட்சிக்காலங்களில் இவ்விரு பிறைகளையும் தீர்மானிப்பதில் கையாளப்பட்டுள்ள ஒழுங்கும் இச்சர்ச்சைத் தீர்வுக்கு ஒரு முன்னுதாரணமாகக் கூட அமைய முடியும். ஏனெனில் இஸ்லாத்தில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டுதான் நாளும் மாதமும் தீர்மானிக்கப்படுகின்றன. கடந்த 1400 வருடங்களாக இதுதான் நடைமுறை.

அந்தடிப்படையில் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாக விளங்கும் ரமழான் மாதம் முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்மாதத்திலுள்ள லைலத்துல் கத்ர் இரவில்தான் உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனதும் இம்மை மறுமை வாழ்வுக்கு நேர்வழிகாட்டக் கூடிய உலகப் பொதுமறையான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அதனால் அல்லாஹ் இந்த முழு மாதத்தையும் மகத்துவப்படுத்தி சிறப்பித்துள்ளான்.

அருள் நிறைந்த மாதமாக ஆக்கி வைத்திருக்கின்றான். இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாகும். அதாவது பகல் வேளையில் உணவு பானங்களைத் தவிர்த்து நோன்பு நோற்று உடல் உள இச்சைகளைக் கட்டுப்படுத்தி இறைவணக்கங்களில் ஈடுபட்டு இக்கடமையை நிறைவேற்ற வேண்டும். இம்மாதம் நிறைவுற்றதும் பெருநாள் கொண்டாட வேண்டும். இது இறை ஏற்பாடாகும்.

அந்த வகையில் ரமழான் மற்றும் நோன்புப் பெருநாளுக்கான தலைப் பிறையைத் தீர்மானித்துக் கொள்வதில் முஸ்லிம்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர். என்றாலும் இந்த இரண்டு பிறைகளையும் தீர்மானித்துக் கொள்வதில் இலங்கை முஸ்லிம்கள் அண்மைக்காலம் தொடக்கம் சர்ச்சைக்கு முகம் கொடுக்கக் கூடியவர்களாக உள்ளனர். அறிவியல் ரீதியானதும் உலகம் இருக்கும் வரையும் நடைமுறைச்சாத்தியமானதுமான பூரணத்துவம் மிக்க ஒரு வாழ்க்கைநெறிக்கு (இஸ்லாம்) சொந்தம் கொண்டாடும் ஒரு சமூகம் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்திருப்பது கவலைக்கும் வேதனைக்குமுரிய விடயமாகும். இந்த மார்க்கத்தில் எல்லா விடயங்களுமே மிகவும் தெளிவானவை. அறிவியல்பூர்வமானவை. அவற்றை காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான அறிவையும், தெளிவையும் அல் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு முன்பாக உள்ளது.

இந்தடிப்படையில்தான் பிறை விவகாரம் அணுகப்பட வேண்டும். இருந்தும் அவை தொடர்பில் உரிய ஒழுங்கில் கவனம் செலுத்தப்படாததன் விளைவாகவே வருடாவருடம் இந்நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால் இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் ரமழான் மாத மற்றும் நோன்பு பெருநாள் தலைப்பிறைகளைத் தீர்மானிப்பது தொடர்பில் அறிவித்துள்ள மூன்று முக்கிய நபிமொழிகள் காணப்படுகின்றன.

01. பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள். பிறையைக் கண்டு நோன்பை விட்டு பெருநாளைக் கொண்டாடுங்கள். மேகக்கூட்டம் மூடி இருந்தால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்யுங்கள்.

(ஆதாரம்: புகாரி, முஸ்னத் அஹ்மத்)

02. ஒரு முறை முஹம்மத் (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் 30வது நோன்பை நோற்று இருந்தார்கள். அச்சமயம் மதீனாவுக்கு அருகிலுள்ள பிரதேசமொன்றிலிருந்து நாடோடி அரபி ஒருவர் மதீனாவுக்கு வந்தார். அவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நாம் நேற்று பிறையைக் கண்டோம். இன்னும் நீங்கள் நோன்பு நோற்று கொண்டிருக்கின்றீர்களே..' என்றார். அப்போது நபி(ஸ்) அவர்கள், 'நீர் உண்மையில் பிறையைப் பார்த்தீரா?' என வினவினார். அதற்கு அவர், 'ஆம். நானும் இன்னும் பலரும் பார்த்தோம்' என்றார். அப்போது முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் தோழர்கள் சகலரையும் அழைத்து நோன்பை விடுமாறி கூறினார்கள்.

(ஆதாரம்: முஸ்னத் அஹ்மத், அபூதாவூத்)

03. குரைப் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு நபிமொழியில் உம்மு பள்ல் (ரலி) அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் தம்மை ஷாமிருந்த (சிரியா) முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார். அங்கு தாம் இருக்கும் போது ரமழான் மாத நோன்பு ஆரம்பமானது. ஜும்ஆ நாளன்று நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் மாத இறுதியில் மதீனாவுக்கு வந்தேன். அப்போது தம்மோடு அளவளாவிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ரமழான் பிறை தொடர்பில் வினவிய போது 'எப்போது நீங்கள் ரமழான் பிறையைப் பார்த்தீர்கள்?' எனக் கேட்டார். நான் ஜும்ஆ நாளன்று கண்டேன்' என்றேன். அப்போது அவர், 'நீர் பார்த்தீரா?' என வினவ, 'நானும் பல மக்களும் பார்த்தோம். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியாவும் நோன்பு நோற்றார்' என்றேன்.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'நாம் சனி இரவே பிறையைப் பார்த்தோம். முப்பது நாட்கள் பூர்த்தியாகும் வரை அல்லது பிறையைக் காணும் வரை நாம் நோன்பு நோற்றோம்' என்றார். 'முஆவியா கண்டதும் அவர் நோன்பு நோற்றதும் போதாதா?' என நான் கேட்டதற்கு 'இல்லை போதாது. இவ்வாறு தான் நபி(ஸல்) அவர்கள் எமக்கு கட்டளை இட்டார்கள்' என்றார்.

(ஆதாரம்: புகாரி, இப்னு மாஜா)

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தின் அறிவியல் நிலைமையை இந்நபிமொழிகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. இந்த நபிமொழிகளில் இரண்டாவது நபிமொழியில் 'மதீனாவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் இருந்து வந்தவர் கூறிய பிறை தொடர்பான செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஏற்று நோன்பை விட்டதோடு தோழர்களையும் நோன்பை விடச் செய்தார்கள்.

ஆனால் ஷாமிலிருந்து வந்தவர் கூறிய செய்தியை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் இற்றைக்கு 1400 வருடங்களுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தான் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்தார்கள். அக்காலப்பகுதி இன்று போல் அறிவியல் மேம்பாட்டையோ, போக்குவத்து, தகவல் தொடர்பாடல் வளர்ச்சியையோ கொண்டிருக்கவில்லை. ஆனாலும் கூட இவ்வறிவிப்புகள் அறிவியல் பூர்வமாகவே அமைந்திருக்கின்றன.

அதாவது மதீனாவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் பிறை காணப்பட்ட செய்தி குறுகிய நேரகாலத்தில் மதீனாவை வந்தடைந்தது. அதனால் அச்செய்தியை ஏற்று தானும் நோன்பை விட்டதோடு, தம் தோழர்களையும் விடச் சொன்னார் நபி(ஸல்) அவர்கள். ஆனால் ஷாம் (சிரியா) மதீனாவிலிருந்து அதிக தூரத்திலுள்ள ஒரு பிரதேசம். அங்கிருந்து செய்தி வந்து சேர பல நாட்கள் எடுத்திருக்கும். அதனால் சிரியாவிலிருந்து வந்த செய்தி ஏற்றுக்கொள்ளப்படாதிருக்க முடியும்.

அதனால் இங்கு நோக்கப்பட்ட இரண்டாவது ஹதீஸின்படி பிறை கண்ட செய்தி விரைவாகக் கிடைக்கப் பெறுமாயின் அதனை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்து பலமானதாக விளங்குகின்றது.

அதேநேரம் ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் மாதக்கணிப்பீடு தொடர்பில் குறிப்பிடும் போது தமது கைவிரல்களால் 29, 30 எனக் காண்பித்து, 'மாதம் என்பது 29 நாட்களாகவும் இருக்கலாம். 30 நாட்களாகவும் அமையலாம். 29 வது நாளில் பிறை தென்படாதபடி மேகமூட்டம் காணப்பட்டால் மாதத்தை 30 நாளாகப் பூர்த்தி செய்யுங்கள். ஏனெனில் நாம் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்கள்' என்று குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த நபிமொழியில், 'நாம் எழுதவோ வாசிக்கவோ தெரியாதவர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் எழுத வாசிக்கக் கூடிய அறிவு கிடைக்கப்பெற்றால் பிறையை அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தீர்மானிக்கலாம் என்பதும் தெளிவாகின்றது. அத்தோடு பிறையைத் தீர்மானிப்பதற்கு அறிவியலையும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களையும் கூட பாவிக்கலாம் என்ற நிலைப்பாட்டையும் பெறக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் இன்றைய நவீன வானசாஸ்திர அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப சந்திரனின் பயணப்பாதையையும், அதன் பயண வேகத்தையும் துல்லியமாகக் கணிப்பிடக் கூடியளவுக்கு உலகம் வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதற்கான சாதன வசதிகளும் புழக்கத்தில் இருக்கின்றன. அதனால் அவற்றின் அறிவைப் பயன்படுத்தி பிறையைத் தீர்மானிப்பதில் கவனம் செலுத்த முடியும்.

மேலும் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் தனியே மழை குறித்து மாத்திரம் அவதானித்து நாட்டுக்கு அறிவிக்கும் ஒரு நிறுவனம் அல்ல. மாறாக அந்நிறுவனமும் கூட சூரியன், சந்திரனின் உதயம் மற்றும் மறைவு தொடர்பில் அவதானிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு அவசியமான உபகரண வசதியை இந்நிறுவனம் கொண்டிருக்கின்றது. அதனால் ரமழான் மற்றும் நோன்பு பெருநாள் பிறை தொடர்பில் அந்நிறுவனத்தின் ஆலோசனைகளையும் கூட பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த ஆலோசனைகள் போதியதாகவோ அல்லது திருப்திகரமானதாகவோ அமையாவிட்டால் இப்பிராந்தியந்தியத்தில் வானசாஸ்திர அறிவியலில் அபரிமித வளர்ச்சியைப் பெற்று விளங்கும் இந்திய வளிமண்டலவியல் மையத்தின் ஆலோசனைகளையும் கூட பெற்றுக் கொள்ளலாம். அப்போது முஸ்லிம்கள் முகம் கொடுத்துவரும் பிறை தொடர்பான நெருக்கடிக்கு திருப்திகரமான தீர்வைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இல்லாவிட்டால் பிறையை அடிப்படையாகக் கொண்ட சர்ச்சை, முரண்பாடுகள் நீடித்து சமூகத்தில் மேலும் பிரிவுகள் அதிகரிக்கக் கூடிய அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

ரமழான் மற்றும் நோன்புப் பெருநாள் பிறையைத் தீர்மானிப்பதில் நிலவும் சர்ச்சை காரணமாக ஏற்கனவே ஒரு குழுவினர் இந்நாட்டில் கணிப்பீடு முறை மூலம் நோன்பையும், பெருநாளையும் தீர்மானித்துக் கொள்கின்றனர். அதன் பின்னரும் இச்சர்ச்சை நீடித்து வருகையில் 'உலகிற்கு சந்திரன் ஒன்று தான்' எனக்கூறி சர்வதேச பிறையே சரி என மற்றொரு பிரிவினர் உருவாகியுள்ளனர். இவ்வருடம் (2018) ஏற்பட்ட நோன்பு பெருநாள் பிறை சர்ச்சையால் இப்பிரிவினருடன் மேலும் ஒரு சில பிரிவினர் இணைந்து பெருநாள் கொண்டாடியுள்ளனர். அதனால் ரமழான் மற்றும் நோன்புப் பெருநாள் பிறை விவகாரத்தில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்குமாயின் சமூகத்தில் மேலும் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமுள்ளன.

நபி(ஸல்) அவர்கள் அறிவியலுக்கு ஏற்ப இலகுபடுத்தி வைத்துள்ள பிறை விவகாரத்தை சிக்கலுக்குரிய ஒன்றாக்கியிருப்பது முஸ்லிம்களேயன்றி வேறுஎவருமில்லை. இந்நிலைமை நீடிப்பது சமூக ஒற்றுமைக்கு ஆரோக்கியமானதல்ல.

ஆகவே சமூகத்தின் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கருத்தில் கொண்டு ரமழான் மற்றும் நோன்புப் பெருநாள் பிறை தொடர்பான சர்ச்சையிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற வேண்டும். பிறை விவகாரம் அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகப்பட வேண்டும். அப்போது தான் பிறை ஒரு சர்ச்சைக்குரிய விவகாரமாக அமையாது.

- மர்லின் மரிக்கார்

 


Add new comment

Or log in with...