காவிரி ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும் | தினகரன்

காவிரி ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் வேண்டும்

கர்நாடக முதல்வர் குமாரசாமி

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பல்வேறு காரணங்களால் இது தள்ளிக்கொண்டே போனது. புதுவையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசியத்தை வலியுறுத்தி விவசாயிகள், அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். புதுச்சேரி, தமிழக அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டன.

இதையடுத்து மத்திய அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைவது தொடர்பாக அறிவிப்பு செய்யப்பட்டது. இது தொடர்பான தகவல் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்பட உள்ள உறுப்பினர்களின் பெயர்கள் இம்மாதத் தொடக்கத்திலேயே அறிவிக்கப்பட்டன.

ஆனால் கர்நாடகத்தின் சார்பில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக்கும் நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகம் அதன் உறுப்பினர்களின் பெயர்களை ஜூன் 12ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்த நிலையில் அதை கர்நாடகம் மதிக்கவில்லை.

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே காவிரி ஆணைய அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம் 1956இன் படி நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்றார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் இந்த பேச்சு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் விவகாரத்தில் மேலும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.


Add new comment

Or log in with...