Thursday, April 25, 2024
Home » ஜனவரியில் இலங்கை அணிக்கு திரும்ப வனிந்து ஹசரங்க திட்டம்

ஜனவரியில் இலங்கை அணிக்கு திரும்ப வனிந்து ஹசரங்க திட்டம்

குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம்

by damith
November 20, 2023 6:00 am 0 comment

இந்தியாவில் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க முடியாதது ஏமாற்றம் தருவதாகக் குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, எதிர்வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள இலங்கை அணியின் சிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் அணியுடன் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஒரு வீரராக உலகக் கிண்ணத்தில் பங்கேற்காதது ஏமாற்றம் தரும் ஒன்று. 2019 உலகக் கிண்ணத்தையும் நான் இழந்தேன். 2019 உலகக் கிண்ணத்தின் பின் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆடிய நிலையில் 2023 உலகக் கிண்ணத்தின் கடைசி நேரத்தில் அதனை இழந்தது கவலை அளிக்கிறது’ என்று இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஹசரங்க லங்கா பிரீமியர் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியின்போதே காயத்திற்கு உள்ளானர். இதனால் அவர் ஆசிய கிண்ணத் தொடரை இழந்தார். எனினும் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காயம் தீவிரம் அடைந்ததால் சத்திரசிகிச்சை செய்துகொள்ள வேண்டி ஏற்பட்டதோடு உலகக் கிண்ண வாய்ப்பையும் இழந்தார்.

எனினும் தன் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார். ‘லங்கா பீரிமியர் லீக் போட்டியின்போது நானாக காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக பலரும் கூறுகிறார்கள், அதே நேரம் இலங்கைக்கு விளையாட நான் விரும்பவில்லை என்றும் சிலர் குற்றம்சாட்டுகிறார்’ என்றார் ஹசரங்க.

‘எல்.பி.எல். தொடரின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து நான் மீண்டு வந்தபோதும் துரதிருஷ்டவசமாக உலகக் கிண்ணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, வழக்கமான உடற்தகுதி பயிற்சியின்போது எனக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. எல்.பி.எல். இல் எனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்தக் காயத்தின் காரணமாக உலகக் கிண்ணத்திற்கு தயாராகும்போது தசை முறிவு ஏற்பட்டது’ என்று ஹசரங்க குறிப்பிட்டார்.

சத்திரசிகிச்சைக்குப் பின்னர் அதில் இருந்து மீண்டு வருவது குறித்து கருத்துக் கூறிய அவர் சத்திரசிகிச்சை செய்து ஐந்து வாரங்கள் கடந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

‘மீண்டு வரும் காலமாக எனக்கு 12 வாரங்கள் தரப்பட்டன. மீண்டு வரும் செயற்பாடுகளை நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன். எனது உடற்பயிற்சி நடவடிக்கைகளை இந்த வாரத்தில் ஆரம்பிப்பேன். அடுத்த வாரத்தில் மெதுவாக ஓட ஆரம்பிக்க இருப்பதோடு ஜனவரியில் சிம்பாப்வே தொடரில் அணிக்கு திரும்ப எதிர்பார்த்துள்ளேன்’ என்றார்.

வனிந்து இல்லாதது உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக இருந்தது. அந்தத் தொடரில் 9 போட்டிகளில் இரண்டில் மாத்திரமே வென்ற இலக்கை அணி 9 ஆவது இடத்தையே பிடித்தது. இதனால் பாகிஸ்தானில் 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரையும் இலங்கை அணி இழந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT