காணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது? | தினகரன்

காணாமல் போனோர் விவகாரம்: உறவினர் ஏக்கம் தீர்வது எப்போது?

காணாமல் போனோரின் உறவினர்கள் வடக்கில் மேற்கொண்டு வரும் சாத்விகப் போராட்டம் ஒரு வருட காலத்தையும் கடந்து பல மாதங்கள் சென்ற பின்னரும், இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வட மாகாணத்தின் வெவ்வேறு இடங்களில் இவ்வாறான அஹிம்சைப் போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பொது இடத்தில் கொட்டில் அமைத்து தங்களது சாத்விகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் போனவர்களின் தாய்மார், தந்தையர், மனைவி, சகோதரர்கள் என்றெல்லாம் பலரும் இவ்வாறு மனம் சளைக்காமல் போராட்டம் நடத்துவதைக் காண முடிகின்றது.

யுத்த காலப் பகுதியில் காணாமல் போன தங்களது உறவுகளுக்கு நடந்த கதியென்ன? அவர்கள் தற்போது உயிருடன் உள்ளனரா அல்லது இல்லையா? அவர்கள் உயிருடன் இருந்தால் தற்போது எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் உயிருடன் இல்லையென்றால் அதனையாவது வெளிப்படையாக அறிவித்து விட வேண்டும்.

காணாமல் போனோரின் உறவினர்கள் இவ்வாறான விடயங்களையே ஆரம்பத்தில் இருந்து அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதியில் இருந்து இவ்வாறான வினாக்களை ஏராளமான உறவினர்கள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் இதற்கான உத்தியோகபூர்வமான, நேரடியான பதிலை முன்னைய அரசாங்கமோ, இன்றைய அரசாங்கமோ வழங்கவில்லை.

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டனரென்பது உண்மைதான்.

ஆனாலும் இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களில் பலரைப் பற்றிய தகவல்கள் இன்னுமே இல்லையென்பதுதான் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றது. இத்தகையோரே ‘காணாமல் போனோர்’ என்ற வரையறைக்குள் உள்ளடக்கப்படுகின்றார்கள். இவர்களது உறவினர்களே இன்னும் கூட வடக்கில் சாத்விகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இறுதி யுத்தத்தின் போதும், யுத்தத்துக்கு முன்னரான காலப் பகுதியிலும் காணாமல் போனதாகக் கருதப்படுவோரெல்லாம் விடுதலைப் புலிகள் என்பதே தென்னிலங்கையின் பார்வையாக இருக்கின்றது. ஆனால் உண்மை அதுவல்ல...

படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளில் ஒரு தொகுதியினர் மாத்திரமன்றி, சாதாரண குடிமக்களும் காணாமல் போயுள்ளதாக பதிவுகள் உள்ளன. காணாமல் போயுள்ளோர் குறித்த விசாரணைகளின் போது அவர்களது உறவினர்கள் இதனை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கின்றனர். சர்வதேச தொண்டர் அமைப்புகளிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் இது தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர்.

எனவே காணாமல் போனோர் விவகாரமோ அல்லது உறவினர்கள் மேற்கொள்கின்ற போராட்டமோ ஏதேனும் மறைமுக நோக்கத்துக்காக உருவகிக்கப்பட்ட விடயங்கள் அல்லவென்பதை ஏனைய இனங்களைச் சேர்ந்தோர் புரிந்து கொள்வது அவசியம்.

இது நீண்ட காலப் பிரிவுத் துயரின் பிரதிபலிப்பு ஆகும். குடும்ப உறுப்பினர் ஒருவரின் பிரிவு என்பது அவரது உறவினர்களுக்கு எவ்வாறான துயரத்தை ஏற்படுத்துமென்பதை பாதிக்கப்பட்டோரால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும். அவர்களது துயரை ஏனையோர் சரிவரப் புரிந்து கொள்கின்ற போதுதான் காணாமல் போனோர் விவகாரமென்பது எத்தனை உணர்திறன் மிக்கதென்பதை உணர முடியும்.

காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக அவர்களது உறவினர்கள் இதுகாலவரை எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அன்றைய அரசுக்கும் இன்றைய அரசுக்கும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். எனினும் உறுதியான பதிலைக் காண முடியவில்லை.

காணாமல் போனதாகக் கூறப்படும் எவரும் இலங்கையிலுள்ள எந்தவொரு படை முகாமிலோ, சிறைச்சாலையிலோ அல்லது பொலிஸ் நிலையத்திலோ இல்லையென்று அரசாங்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான தகவல் உண்மையாக இருக்க முடியும். ஆனால் அப்பதில் பொருத்தமானதல்ல. உரிய விசாரணைகளை முன்னெடுத்து உறுதியான பதிலைக் கூற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இல்லையேல் இவ்விகாரம் முடிவின்றித் தொடரவே போகின்றது. அதுமாத்திரமன்றி இவ்விவகாரமானது சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தையே ஏற்படுத்திக் கொண்டிருக்கப் போகின்றது என்பதும் உண்மை.

இது இவ்விதமிருக்க, காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு இழப்பீடுகளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்யப் போவதாக தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்திருக்கிறார்.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளையும், இழப்பீடு வழங்குவதையும் சமகாலத்தில் முன்னெடுக்க வேண்டுமென்றே அமைச்சர் மனோ கணேசன் யோசனை முன்வைத்திருக்கிறார்.

குடும்ப உறுப்பினரைக் காணாமல் நீண்ட காலமாக துயரில் வாடும் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்பது அவசியம். ஆனாலும் தகுந்த விசாரணைகளை நடத்தி உறுதியான பதிலை அவர்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவே இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைத் தரும்.


Add new comment

Or log in with...