விருப்பங்களை வெற்றியாக்கும் வழிகள் எவை? | தினகரன்

விருப்பங்களை வெற்றியாக்கும் வழிகள் எவை?

எமது தன்னம்பிக்கை பெரும்பாலும் சின்ன வயதிலேயே உருவாக்கப்பட்டு விடுகிறது. எமது தன்னம்பிக்கை என்பது எம்மை பற்றிய எமது அபிப்பிராயத்தின் எதிரொலியாகும். நாம் யார், எம்மால் என்ன முடியும், முடியாது என்ற எம்மைப் பற்றிய ஒரு தொகுப்பு எமது மனதில் படிந்து விடுகிறது. அதனை நாம் எம்மைப் பற்றிய உண்மை என்று நினைக்கிறோம்.

ஒரு வீட்டிலேயே ஒவ்வொரு பிள்ளையும் வித்தியாசமான தன்னம்பிக்கையில் இருப்பதைக் காணலாம். சில இயல்புகள் பிறக்கும் போதே உருவாகின்றன. சில எமது சூழலிலிருந்து அல்லது பெற்றோர், பெரியவர்களில் இருந்து எடுப்பவை. இது பரம்பரையில் இருந்தும் வரலாம். ஒரு குழந்தை பொதுவாக தன்னைப்பற்றி எந்தவிதமான அபிப்பிராயங்களும் இல்லாமல்தான் பிறக்கிறது. பிறகு அது மற்றவர்கள் என்ன மாதிரி வாழ்க்கையைப் பார்க்கிறார்கள், தன்னைப் பற்றி பெரியவர்கள் என்ன அபிப்பிராயம் வைத்து இருக்கிறார்கள் என்பதையும் வைத்துத்தான் தன்னைச் சுற்றி ஒரு மனப்படத்தை அல்லது அடையாளத்தை உருவாக்குகிறது.

இது பெரும்பாலும் அதனுடைய உண்மையான நிலை கிடையாது. இது பொய்யான நம்பிக்கை தொகுப்பு. ஆனால் அதனை நாம் நம்பும்போது அது உண்மை ஆகிறது. தன்னம்பிக்கை குறைந்தவர்கள் பொதுவாக ஒதுங்கி இருப்பர். அல்லது அவர்களுடைய குரல் மிகவும் சத்தமாக கேட்கும். இது ஒருவகையில் நான் மற்றவர்களால் கேட்கப்பட வேண்டும் என்ற தன்மை. ஒரு நிகழ்ச்சியில் தனக்கு மதிப்பு கொடுக்கிறார்களா அல்லது தன்னை முன்னுக்கு வைக்கிறார்களா என சபையில் பார்த்தபடி இருப்பார்கள். ஆனால் அப்படி அவர்கள் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால் அதனைப் பற்றி மிகவும் முறைப்பாடுகள் சொல்வார்கள்.

இன்னுமொரு இயல்பு தாழ்வு மனப்பான்மையின் எதிரொலிப்பாகும். தனக்கு தெரியாததையும் தெரியும் என்று செய்யத் தொடங்குவார்கள். தாழ்வு மனப்பான்மையின் குணஇயல்புகள் பலவாகும். அவர்கள் மற்றவர்களிடம் கௌரவத்தை எதிர்பார்ப்பார்கள்.

தன்னை எதற்கும் முன்னுக்கு வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி இல்லை என்றால் அவர்கள் மிகவும் குறைகூறுவார்கள்.

மற்றவர்களோடு தன்னை ஒப்பிடுவார்கள் அல்லது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்லுவார்கள். இதில் என்ன இயல்பு இருந்தாலும் உங்களுக்கு அடிமன தன்னம்பிக்கை பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். இதனை எப்படி மாற்றுவது?

முதலாவது உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்று உணருவது. மக்கள் தங்கள் இயல்புகளை உணரும் தன்மை இல்லாமல் இருப்பது வழக்கம்.

நாம் எமது நிலையை உணர்ந்ததும் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்துவது அவசியம்.பல தடவை உங்கள் மனதில் கற்பனையில் தன்னம்பிக்கையை வளர்ப்பது உள்மனநிலையை மாற்ற உதவும்.

நாம் எப்போதும் புதிய தகவல்களை எடுத்தபடிதான் இருக்கிறோம். வாசிப்பது, பார்ப்பது, கேட்பது, எப்படியான மனிதர்களோடு பழகுகிறோம் என்பது எல்லா வகையிலும் எமது வாழ்க்கையைப் பாதிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க வேண்டுமானால் எங்களை வளர்க்கக் கூடிய தகவல்களை எடுக்கத் தொடங்க வேண்டும். அதன் மூலம் எங்களை மாற்றி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்.

ஞானா உருத்திரன்
(சுவீடன்)


Add new comment

Or log in with...