இன்புளுவன்சா ஆபத்தை வெற்றி கொள்வது எவ்வாறு? | தினகரன்

இன்புளுவன்சா ஆபத்தை வெற்றி கொள்வது எவ்வாறு?

 

இன்புளுவன்சாவை சரியாக அறிந்து கொண்டு சவாலுக்கு முகம் கொடுப்போம் என்று சுகாதார போஷாக்கு சுதேச வைத்திய அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்புளுவன்சா அச்சுறுத்தல் தொடர்பாக பணியகத்தின் பணிப்பாளர் பபா பளிகவடன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இன்புளுவன்சா என்பது வைரசினால் பரவும் நோயாகும். இன்புளுவன்சா நோயாளியொருவர் இருமும் போது, தும்மும் போது, சத்தமாகக் கதைக்கும் போது, சிரிக்கும் போது வெளிவரும் எச்சில் துணிக்கைகள், சளி என்பவற்றால் நோய் ஏனையோருக்குப் பரவும்.

காய்ச்சல், இருமல், தொண்டைவலி, மூக்கிலிருந்து சளி வடிதல் ஆகிய அறிகுறிகள் இன்புளுவன்சா நோயாக இருக்கலாம். அவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் தகுதி வாய்ந்த வைத்தியரை நாடவும்.

நோய் கடுமையாகும் போது தோன்றக்கூடிய அபாயகரமான அறகுறிகளாவன:

மூச்சுவிடுவதில் சிரமம், மார்பு, வயிற்றுப் பகுதிகளில் வலி மற்றும் தொடர்ச்சியான வாந்தி, மயக்கம், சிறு பிள்ளைகளுக்கு பாலை உறிஞ்சி குடிக்கும் தன்மை குறைதல், நீர் திரவங்களை அருந்துவது சிரமமாதல், சிறுநீர் வெளியேறல் குறைதல், அமைதியின்மை போன்ற நோய் அறிகுறிகள் தோன்றலாம். மேற்குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்லவும். உங்களுக்கு இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் தென்பட்டால் விரைவாகக் குணமடைவதற்கு நன்றாக ஓய்வெடுக்கவும்.

“முட்டை, மீன், இறைச்சி, கருவாடு, கடலை, பருப்பு போன்ற போஷணைப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். கஞ்சி, சூப் போன்ற சூடான உணவுகளை அருந்தவும். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரவும். இன்புளுவன்சா நோய் பரவுவதை தடுக்க, தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டையினாலோ, டிசு கடதாசியினாலேயே மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ளவும் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடிக் கொள்ளவும்.

இருமும் போதும் தும்மும் போதும் பாவித்த டிசு பேப்பரை குப்பைக் கூடையில் போடவும். கைக்குட்டையை தோய்த்து உலர்த்தவும்.

கைகளால் மூக்கையும், வாயையும் தொடுவதை தவிர்க்கவும். வீட்டைவிட்டு வெளியேறி மீண்டும் வந்தவுடன் கைகளை சவர்க்காரம் கொண்டு நன்றாகக் கழுவவும். பொதுமக்கள் நடமாடும் இடங்களுக்கு செல்வதை குறைக்கவும். இன்புளுவன்சா நோயாளிகள் பணியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். நோயுற்ற குழந்தைகளை முன்பள்ளிகள், பாடசாலைகள், மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். இன்புளுவன்சா நோய் தொற்றக் கூடிய கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அவதானத்துக்குரியவர்கள் கர்ப்பிணிப் பெண்கள், இரண்டு வயதுக்குக் குறைந்தவர்கள், அறுபத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்கள், நீரிழிவு போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நீண்ட கால ஸ்டீரோயிட் மருந்துகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் ஆவர்,

நீங்களும் இன்புளுவன்சா தொற்றக் கூடிய அவதானமுடையவர்களாக இருந்தால் தகுதி வாய்ந்த வைத்தியரை உடனடியாக அணுகவும்.

24 மணித்தியாலமும் செயற்படும் ‘சுவசெரிய' அவசர தொலைபேசி சேவைக்கு அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் நோய்களுக்கான சிகிச்சையை இலவசமாகப் பெறலாம்.

அதன் தொலைபேசி இலக்கம் 0710107107 ஆகும். வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களை நேரடியாக தொடர்புகொள்ளக் கூடிய 'சுவசரிய' நடமாடும் சுகாதார ஆலோசனை சேவை சுகாதார அமைச்சின் சுகாதார அபிவிருத்திப் பிரிவின் சமூக செயற்பாடாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்தகவல்களை தொற்று நோய் பிரிவின் விஞ்ஞானியும் பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் பபா பளிகவடன தெரிவித்தார்.

 


Add new comment

Or log in with...