ஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம் | தினகரன்

ஆன்மிக பண்புகளை பேணி நல்லிணக்கத்திற்கு கைகோர்ப்போம்

முஸ்லிம் உலகம் ஈகைத் திருநாள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை பேருவகையுடன் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். ஒருமாத காலம் ரமழான் நோன்பை நோற்பதன் மூலம் இறை கட்டளையை நிறைவேற்றி அவனுக்கு அடி பணிந்து இரவுகள் பூராவும் விழித்திருந்து நல்லமல்கள் செய்த முஸ்லிம்கள் மனநிறைவுடன் இன்று பெருநாளை கொண்டாடுகின்றனர். குர்ஆனிய போதனை வழிநின்று பொறுமை, தியாகம், இறையச்சம் போன்றவற்றை அடைந்துகொண்டு அடுத்து வரும் பதினொரு மாதங்களிலும் அந்த போதனை வழியை பின்பற்றும் உறுதியான மனநிலையுடன் இறைவனை புகழ்ந்த வண்ணம் பெருநாளை எதிர்கொண்டுள்ளனர்.

பெருநாள் தினத்தில் எல்லோரும் இன்புற்றிருக்கவேண்டுமென்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. ஏழைகளின் பசியை உணர்த்துவதும் நோன்பின் படிப்பினையாகும். வறுமையில் வாடும் குடும்பங்களை வாழவைத்து மகிழ்ச்சிப்படுத்தும் பாரியதொரு இறை பணியை பூரணப்படுத்தி விட்டு படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய நாளாகவும் இந்த ஈதுல் பெருநாளை நோக்க முடிகிறது. ரமழானில் பெற்றுக்கொண்ட பயிற்சிகளை பெருநாளோடு விட்டுவிடாமல் இஸ்லாம் காட்டும் அந்த வழிகாட்டலை வாழ்நாள் பூராவும் பின்பற்ற ஒவ்வொருவரும் உறுதிபூணவேண்டும்.

ரமழான் மாதத்தில் பெற்றுக்கொண்ட வழிகாட்டல்களும், பயிற்சிகளும் போதனைகளும் ஏனைய பதினொரு மாதங்களிலும் முஸ்லிம்களின் நடைமுறையில் இருக்க வேண்டும். ஏழைகளின் பசியுணர்ந்து தர்மங்களில் ஈடுபட்டவர்கள் அதனை ஏனைய காலங்களிலும் மேற்கொள்ள வேண்டும்.

நாடு கடந்த காலங்களில் முகங்கொடுத்து இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாதவர்களாக இருக்கும்போதே இந்த பெருநாள் வந்துள்ளது. தான தர்மங்களின் அவர்களுக்குரிய பங்கு கிடைத்துள்ளதா என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாம் அயலவர்களுடன் அன்பாகவும் இணக்கமாகவும் நடந்துகொள்வதை வலியுறுத்தும் மார்க்கமாகும். அயலவர்கள் எந்த இனத்தை, மதத்தை, மொழியை உடையவர்களாக இருந்தாலும் பண்டிகை காலத்தில் உணவுப் பொருட்களைப் பரிமாறி உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அயலவர்கள் ஏனைய சகோதர சமூகத்தவர்களாக இருந்தாலும், அவர்களுடனான நல்லிணக்கம் இன்றி சுவனத்தை அடைய முடியாதென்பதை இஸ்லாம் முஸ்லிம்களுக்கு போதிக்கின்றது.

பண்டிகை காலங்களில் குடும்ப ஒன்றுகூடல்கள், சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவது வழக்கமாகும். இறைவனும் அல்குர்ஆனினூடாக தன் படைப்பாற்றலை, அற்புதங்களை தரிசிக்க வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா? படிப்பினை பெற வேண்டாமா? என்று சுற்றுலாப் பயணங்களை ஊக்குவித்துள்ளார்ன். எனினும் பண்டிகைக்காக சுற்றுலாப் பயணங்களை சமூக சீர்கேடு, இன ஐக்கியத்துக்கு பங்கம் ஏற்படாதவாறு அமைத்துக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.

இம்முறை ரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் இன, இயக்க ரீதியான முரண்பாடுகளில் இருந்து விடுபட்டிருந்தது பாராட்டத்தக்கதாகும்.

இந்த அரசாங்கம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தி வருகின்றதை நாம் அறிவோம். நல்லாட்சி அரசாங்கம் கடந்தகால அரசாங்கத்தை பார்க்கவும் மத உரிமைகளை பாதுபாப்பதிலும் அதிக முக்கியத்துவம் வழங்கி செயலாற்றுகின்றது. வழமைக்கு மாறாக மாற்று மதத்தவர்களது பங்களிப்புடன் நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாடெங்கிலும் என்றுமில்லாதளவுக்கு இப்தார் நிகழ்வுகள் நடந்த ஒரு நோன்பாக இந்தாண்டு நோன்பினைக் குறிப்பிடலாம்.

அரசாங்கம் எதிர்பார்க்கும் நல்லிணக்கத்துக்கும், மத உரிமைகளுக்கும் முஸ்லிம்கள் தம் மத்தியில் இயக்க முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு தடையாக இருந்துவிடக்கூடாது. இஸ்லாமிய வரலாற்றில் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது. எனினும் முரண்பாடுகள் மோதலாக உருவெடுக்க கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் உறுதியாக இருக்க வேண்டும்.

ரமழானை நிறைவு செய்து பெருநாளையும் கொண்டாடியதுடன், பணி முடிந்துவிட்டதாக எண்ணி மீண்டும் பழைய இடத்துக்கு திரும்பக்கூடாது. புதுப்பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். கடந்த காலத் தவறுகள் இனியொருபோதும் இடம்பெறக்கூடாது. அதற்கான நற்சிந்தனை உள்ளங்களில் ஏற்படவேண்டும். ரமழானில் நாம் பெற்றுக்கொண்ட பயிற்சிகள் போதனைகளை பெருநாளோடு மறந்துவிடாமல் எதிர்காலத்தில் எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்ததாக அமையவேண்டும். ரமழான் போதனைகளை வாழ்நாள் பூராவும் எடுத்து நடந்திட அனைவரும் பெருநாள் தினத்தில் திடசங்கற்பம் கொள்வோமாக.

சமாதான, சக வாழ்வு, நல்லிணக்கம் தளைத்தோங்க அனைத்து மக்களும் மானுட நேயத்துடன் ஒன்றிணைய வேண்டும். இன மத மொழி கடந்து மனிதர்களாக ஒன்றுபட வேண்டும். இது தான் குர்ஆனிய போதனை. ஈகைத் திருநாளில் நல்லிணக்க, சகவாழ்வுக்காக சகலருடனும் முஸ்லிம்களும் ஒன்றாக கைகோர்ப்போமாக!


Add new comment

Or log in with...