தபால் சேவைகள் கடும் பாதிப்பு; வெளிநாட்டு பொதிகள் தேக்கம் | தினகரன்


தபால் சேவைகள் கடும் பாதிப்பு; வெளிநாட்டு பொதிகள் தேக்கம்

தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

* மூன்று நாட்களில் ரூ.500 மில்.இழப்பு
* வேலைநிறுத்தம் நியாயமற்றது
* சர்வதேசத்தில் பெரும் அபகீர்த்தி

தபால் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் வேலை நிறுத்தத்தால் தபால் திணைக்களத்துக்கு இதுவரை 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளரும் தபால் மா அதிபரும் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் பத்து லொறிகளில் வெளிநாட்டுப் தபால் பொதிகள் தேங்கிக் கிடப்பதால் சர்வதேச தபால் சேவை பட்டியலிலிருந்து இலங்கை தடைசெய்யப்படுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது என்கின்றபோதும் இத் தருணத்தில் இவ்வேலைநிறுத்தம் நியாயமற்றது என சுட்டிகாட்டிய மேற்படி அதிகாரிகள் போராட்டத்துக்கு தீர்வு காணப்பட்டாலும் தபால் திணைக்களத்துக்கு ஏற்பட்டிருக்கும் நட்டம், பாதிப்பு மற்றும் அபகீர்த்தியை எவ்வாறு சீர்செய்வது என்றும் கேள்வி எழுப்பினர்.

தபால் அமைச்சில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.பி.பி மீகஸ்முல்ல மற்றும் தபால் மாஅதிபர் டி.எல்.பி ரோஹன அபேரத்ன ஆகியோர் கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறினர். கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் முதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கபட்டுள்ளது. இதற்குப் பின்னர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்குள் எங்கிருந்தும் தபால் பொதிகள் கொண்டுவரப்படவில்லை. வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று இருந்த அதே தபால் பொதிகளே இன்னமும் அங்கு தேங்கிக் கிடக்கின்றன. ஆனால் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் பத்து லொறி பொதிகள் இன்னமும் கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டிருப்பது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துமென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் மூன்று நாட்களுக்கு அதிக காலம் இப்போது தான் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் திணைக்களத்துக்கு மிகப் பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 150 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்து வந்தது. இந்த வருமானம் சில நாட்களுக்கு 180 மில்லியன் ரூபாய்கள் வரை அதிகரித்தும் சென்றன. கடந்த மூன்று நாட்களாக இந்த வருமானம் திணைக்களத்துக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள நட்டத்தை இன்னமும் எம்மால் கணக்கிட முடியாமல் உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.

தபால் திணைக்களத்தின் வருமானத்துக்கும் செலவீனத்துக்குமிடையில் பாரிய இடைவெளியுண்டு. இதனை சீர் செய்வதற்காக நாம் பாடுபட்டு வரும் நிலையில் இந்த தொடர்ச்சியான பணிபகிஷ்கரிப்பினால் எதிர்பாராத பாரிய நட்டத்தையே நாம் சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கடுகதி தபால் சேவை மூலம் கடந்த வருடம் திணைக்களம் 90 மில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றிருந்தது. தற்போது எமது சேவை முடக்கத்தினால் பல தனியார் நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிரப்ப முன்வந்துள்ளன. இழந்த இடத்தை மீண்டும் பெறுவது அத்தனை இலகுவான விடயமல்ல என்றும் அவர் கூறினார்.

தபால் திணைக்கள ஊழியர்களின் லீவுகளை ரத்து செய்யும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றபோதும் ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்கத் தவறியுள்ளனர். அமைச்சின் அதிகாரிகள் என்ற வகையில் நாம் தொழிற்சங்கத்தினருடன் பேச்சு நடத்துவதிலிருந்து எம்மாலான ஆகக்கூடிய அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து விட்டோம். ஆனாலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தற்போது எமது எல்லைக்கும் அப்பால் சென்றுவிட்டது என்றும் தபால் மா அதிபர் கவலை தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டு சேவை வழங்கும் திணைக்களத்துக்காக வெளியிடப்பட்ட சுற்றரிக்கையில் உள்ள ஆட்சேர்க்கும் நடைமுறையிலுள்ள குளறுபடியை மாற்றக்கோரியே தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். அந்த நடைமுறை யதார்த்தமற்றது என்பதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். என்றாலும் இது சேவை வழங்கும் பல திணைக்களங்களுடன் தொடர்புபட்டது என்பதனால் அரசாங்கத்தால் இதற்கு உடனடியாக தீர்வு வழங்க முடியாது.

இதற்காக அமைச்சரவை உப அமைச்சரவை குழுவொன்றையும் நியமித்து ஆராய்ந்து வருகின்றது. ஜூன் முதலாம் திகதி இது தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் இதற்காக இரண்டு வாரகால அவகாசம் கோரியது. ஆனால் 14 நாட்கள் ஆவதற்கு முன்னமே 11 ஆம் திகதியன்றே இவர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கியது நியாயமற்றது என்றும் தபால் மா அதிபர் தெரிவித்தார்.

அமைச்சரவையால் எடுக்கப்பட வேண்டிய தீர்மானத்துக்காக திணைக்களத்தை மேலும் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயமற்ற செயல் என்பதால் தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...