இளம் பெண்ணின் வயிற்றுக்கு வெளியே இருந்த ஈரலை வயிற்றுக்குள் பொருத்தி சாதனை | தினகரன்

இளம் பெண்ணின் வயிற்றுக்கு வெளியே இருந்த ஈரலை வயிற்றுக்குள் பொருத்தி சாதனை

தன்சானியா நாட்டு இளம் பெண்ணின் வயிற்றுக்கு வெளியே இருந்த ஈரலை அறுவைச் சிகிச்சை செய்து வெற்றிகரமாக வயிற்றுக்குள் பொருத்தி சிம்ஸ் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

தன்சானியா நாட்டைச் சேர்ந்த வர் அமூர் சவுதா சுலைமான் (19) பிறவிலேயே குடல் துருத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த பெண்ணின் ஈரல் தொப்புள் வழியாக வயிற்றுக்கு வெளியே வந்திருந்தது. அந்நாட்டில் பல மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமாகவில்லை.

இதையடுத்து பெற்றோர் சென்னை வடழபனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் மகளை அனுமதித்தனர். டொக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு சிக்கலான அறுவைச் சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர். அதன்படி மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை இயக்குநர் டொக்டர் பட்டா ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அறுவைச் சிகிச்சை மூலம் மிகவும் பாதுகாப்புடன் வெளியே இருந்த ஈரலை வயிற்றுக்குள் வெற்றிகரமாக பொருத்தினர்.

இந்த சிக்கலான அறுவைச் சிகிச்சை குறித்து இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை இயக்குநர் டொக்டர் பட்டா ராதாகிருஷ்ணன், மயக்க மருந்து மற்றும் வலி மேலாண்மைத் துறை இயக்குநர் டொக்டர் ராகவேந்திரன் கூறும்போது, “அந்த பெண்ணின் வயிற்றுக்குள் குறைந்த அளவு இடமே இருந்தது. அதனால் காற்றை வயிற்றுக்குள் செலுத்தி இடத்தை அதிகரிக்கச் செய்தோம். வயிறு தசைகளின் இறுக்கமும் குறைக்கப்பட்டது. அதன்பின் வயிற்றுக்கு வெளியே இருந்த ஈரலை அழுத்தாமலும் சேதப்படுத்தாமலும் உள்ளே பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் பெண் நலமாக இருக்கிறார். விரைவில் மருத்துவமனையில் இருந்து தன்சானியாவுக்கு செல்ல உள் ளார்.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தன்சானியா நாட்டு பெண்ணுக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்த டொக்டர்கள் குழுவினரைப் பாராட்டிய எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது:

“வயிற்றுக்கு வெளியே ஈரல் இருப்பது மிகவும் அரிதானது. இந்தியாவில் முதல்முறையாக இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இரைப்பை குடல், பித்தநீர் மற்றும் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் சிம்ஸ் மருத்துவமனை முன்னிலை வகிக்கிறது. இந்த மருத்துவமனையில் பன்னாட்டு தரத்துக்கு ஏற்ப மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்க தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தப்படுகிறது” என்றார்.


Add new comment

Or log in with...