நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதிக்கு பரிந்துரை | தினகரன்

நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதிக்கு பரிந்துரை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் நீதிபதிகளுக்கு இடையே மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு செல்கிறது.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேபோல் 18 பேர் பதவியை பறித்தது செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பு வழங்கியுள்ளார். மாறுபட்ட தீர்ப்பால் 18 எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு செல்ல வாய்ப்பு இல்லை.

மாறுபட்ட தீர்ப்பு காரணமாக 18 தொகுதியிலும் இப்போது இடைத்தேர்தல் கிடையாது. 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த ஏற்கனவே விதித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து 18 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.

அதிமுக தலைமை கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜராகி வாதிட்டார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி வாதிடும்போது, கட்சி தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து 18 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பதிலளித்து வாதிடும்போது, எடியூரப்பா வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தை போலதான் நாங்களும் மனு கொடுத்தோம்.

இதுகட்சி தாவல் இல்லை. எடியூரப்பா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதுவரை உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படவில்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி கடந்த ஜனவரி 24ம் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இதற்கான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதில் நீதிபதிகளுக்கு இடையே மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...