Wednesday, April 24, 2024
Home » வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்

வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பட்ஜெட்

- இரண்டாவது உலக தெற்கின் குரல் மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி

by Rizwan Segu Mohideen
November 19, 2023 11:18 am 0 comment

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருக்கும் வேளையிலும், நாட்டு மக்களின் நலிவடைந்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிகழ்நிலை முறையில் உலக தெற்கின் குரல் (Voice of Global South Summit) அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நேற்றுமுன்தினம் (17) ஆற்றிய உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மாநாடு இரண்டாவது முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் ஆரம்பமாகியது, அபிவிருத்தி அடைந்துவரும் பல நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக இந்தியாவிற்கு பாராட்டு தெரிவித்தார்.

முதல் முறையாக நடைபெற்ற உலக தெற்கின் குரல் மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியாவின் தலைமைத்துவத்தையும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் முன்னுரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதால் கிடைக்கக்கூடிய முன்னேற்றகரமான தாக்கத்தையும் வரவேற்றார்.

இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டின் வெற்றியை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அதனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடிந்ததாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாம் தவணைக் கடனைப் பெற்றுக்கொண்டமை மற்றும் இலங்கையின் இருதரப்புக் கடன் தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவினால் அடைந்துகொள்ளப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

படுகடன் தொடர்பிலான பிரச்சினைகளின் கடினத் தன்மையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான நிலையான தீர்வுகளை காண கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீண்டகால வளர்ச்சிக்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், உறவுகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அதேபோல் தனது அண்மைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டுக் கொள்கையின் பலனாக பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடையும் வகையில் இரு நாடுகளினதும் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டிஜிட்டல் மயமாக்கலில் இன்று இந்தியா வெற்றி கண்டுள்ளது. அத்துறை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வலுவான அரச சேவைக் கட்டமைப்புக்குள் டிஜிட்டல் மயமாக்கலின் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT