ஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | தினகரன்


ஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஞானசாரருக்கு 6 மாத கடூழிய சிறை; 50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு-Gnanasara Sentenced to 6 Months in Jail

 

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகம், கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று (14) இவ்வுத்தரவை வழங்கியது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில், இடம்பெற்ற வழக்கில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 09 இராணுவ புலனாய்பு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதவானாக கடமையாற்றிய ரங்க திஸநாயக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, திறந்த நீதிமன்றில் சந்த்யா எக்னலிகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஹோமாகம நீதவான் உதேஷ் ரணதுங்க இன்று (14) வழங்கியிருந்தார்.

ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை 06 மாதத்தில் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் ரூபா 1,500 அபராதத் தொகையையும் விதித்தார்.

தீர்ப்பு:
குற்றவியல் சட்டத்தின் இலக்கம் 386 மற்றும் 486 ஆகிய பிரிவின் கீழ், குற்றமிழைத்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய இரு வேறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதற்கு அமைய 06 மாதம் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனை, மற்றும் ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா ரூபா 1,500 வீதம் ரூபா 3,000 அபராதம் இதன்போது விதிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சந்த்யா எக்னலிகொடவுக்கு ரூபா 50,000 இழப்பீடு வழங்கமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். அதனை செலுத்த தவறின், அதனையும் அபராதமாக அறவிடுமாறும் உத்தரவிட்டார். குறித்த பணத்தை எவ்வழியிலேனும் செலுத்தத் தவறுமிடத்தில், மேலும் 03 மாத கால சாதாரண சிறை தண்டனைக்குள்ளாக்கப்படும் என நீதவான் இதன்போது தெரிவித்தார்.

குறித்த தீர்ப்பை அறிவித்தவுடன், பிரதிவாதி கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஞானசார தேரர், தான் அறிவித்தலொன்றை விடுக்க வாய்ப்பு அவசியம் என தெரிவித்து, "நீதிமன்றம் மாத்திரம்தான் இருக்க வேண்டும்?" என கூறினார்.

அவ்வாறான அறிவித்தலை விடுப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்த நீதவான், வேண்டுமானால் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் என அறிவித்தார்.

இதனையடுத்து, ஞானசார தேரர் சிறைச்சாலை பஸ்ஸை நோக்கி அழைத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில், அதற்கு அருகில் பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று அங்கு குழுமியிருந்ததோடு, அவர்கள் சற்று அமைதியற்ற வகையில் நடந்துகொள்ள முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிக்குகள் சிலர், வழக்கின் வாதியான சந்த்யா எக்னலிகொடவுடன் வந்திருந்த பெண்கள் இருவருக்கும் குற்றம் சுமத்தும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 2016 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, சந்த்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் தொடர்பில், எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் நீதவானிடம் முறையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்து ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையையும் வழங்கியிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த கடந்த மே 24 ஆம் திகதி, ஹோமாகம நீதவான் நீதிமன்றில், நீதவான் உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் உதேஷ் ரணதுங்க ஞானசார தேரர், குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டது.

அதற்கமைய  இன்றையதினம் (14) அதற்கான தீர்ப்பை நீதவான் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது நீதிமன்ற வளாகத்தைச் சூழ கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் நீர்த்தாரை தாக்குதலுக்கான தயார்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்நாயகமான, கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக, கடந்த 2008 ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்திலுள்ள சமய தலம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலான சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...