முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட, மாகாண சபை திருத்த சட்டத்திற்கு எதிரான, அடிப்படை மனித உரிமை மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படாமலேயே உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று (14), பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நலின் பெரேரா, புவனேக அலுவிகாரே ஆகிய மூன்று நீதிபதிகள் குழுவின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட, மாகாண சபை தேர்தல் நடாத்துவதற்கான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட முறை, சட்ட விரோதமானது என அறிவிக்குமாறு தெரிவித்து, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால், கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இச்சட்டமூலம், சர்வசன வாக்கெடுப்பிற்கு விடப்படாமல், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மைக்கு அமைய நிறைவேற்றப்பட்டமை, அரசியலமைப்புக்கு முரணானது என அவர், தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக, சபாநாயகர், சட்ட மாஅதிபர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.
தீர்ப்பை மேற்கோள் காட்டி, குறித்த உத்தரவை வழங்கிய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை நீதிபதிகளின் முடிவுக்கு அமைய, குறித்த மனுவை விசாரணைக்குட்படுத்தாமலேயே நிராகரிப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Add new comment