தபால் ஊழியர்கள் 3 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம் | தினகரன்

தபால் ஊழியர்கள் 3 ஆவது நாளாகவும் வேலை நிறுத்தம்

11 இலட்சம் தபால்கள் தேக்கம்; தபால் சேவைகள் பாதிப்பு

மூன்றாவது நாளாகவும் நேற்று இடம்பெற்ற தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக நாடுபூராகவும் சுமார் 11 இலட்சம் தபால்கள் குவிந்துள்ளதாக அறிய வருகிறது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இதற்கு முன்னர் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும் பிரச்சினைகளுக்கு உடன்பாடு எட்டப்படாத நிலையில் வேலைநிறுத்தம் நேற்று மூன்றாவது நாளாகவும் நீடித்தது. ஆட்சேர்ப்பு முறை மற்றும் பதில் தபால்அதிபர்களின் நிரந்தர நியமனம் அடங்கலான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு வார காலத்தினுள் தபால் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு பெற்றுத் தருவதாக அறிவித்துள்ள நிலையிலே வேலை நிறுத்தம் இடம் பெறுவதாக அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல தெரிவித்தார்.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொள்வது அநீதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் ​வேலைநிறுத்தத்தினால் தபால் பரிவர்த்தனை நிலையத்தில் 3 இலட்சம் தபால்கள் குவிந்துள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.நாடெங்கும் தபால் நிலையங்கள் செயலிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.(பா)


Add new comment

Or log in with...