ரொஹிங்கிய அகதி முகாமில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு | தினகரன்

ரொஹிங்கிய அகதி முகாமில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் ஒரு மில்லியன் ரொஹிங்கிய அகதிகள் தஞ்சமடைந்திருக்கும் முகாமுக்கு அருகில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய அகதி முகாமாக மாறியிருக்கும் இந்த பகுதியில் எதிர்வரும் மாதங்களில் ஏற்படவிருக்கும் கடும் மழையால் பாரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்படும் ஆபத்துக் குறித்து உதவி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

அருகில் இருக்கும் மலைகளில் இருந்து அடித்துவரப்பட்ட சேற்று மண்ணில் புதையுண்டே நேற்று பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அகதி முகாமைச் சூழவிருக்கும் மலைப்பிரதேசத்தில் வசித்து வரும் அகதிகளே நிலச்சரிவு ஆபத்திற்கு முகம்கொடுத்திருப்பதாக உதவி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் பெய்து வரும் கடும் மழையால் குறைந்தது 300 ரொஹிங்கிய தற்காலிக முகாம்கள் சேதமடைந்துள்ளன.

மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கையை அடுத்தே கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் சுமார் 700,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளனர். இதனை ஒரு இன அழிப்பு என்று ஐ.நா குற்றம்சாட்டுகிறது.


Add new comment

Or log in with...