கிம் –டிரம்ப் சந்திப்பு நம்பிக்கையோடு முடிவு | தினகரன்

கிம் –டிரம்ப் சந்திப்பு நம்பிக்கையோடு முடிவு

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக்களைவுக்கு இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையில் சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத களைவை மேற்கொள்வதற்கு இணைந்து செயற்பட இரு தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தனது பழைய எதிரியான வட கொரியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

எனினும் இந்த உச்சி மாநாட்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்த இலக்கை எட்டுவது குறித்து சிறு விபரங்களே குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொரிய தீபகற்பத்தில் முழுமையாக அணு ஆயுத களைவுக்கு டி.பி.ஆர்.கே (வட கொரியா) மற்றும் அதன் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி அளித்துள்ளார்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த அணு ஆயுதக்களைவு “மிக, மிக விரைவில்” செயற்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் வட கொரிய அதிகாரிகள் முடியுமான முன்கூட்டிய திகதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த உச்சிமாநாடு மூலம் வெறுமனே அடையாள முடிவுகளே பெறப்பட்டிருப்பதாகவும் உறுதியான முடிவுகள் இல்லை என்றும் அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“அணு ஆயுதக்களைவுக்கு மேலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமா என்பது குறித்து தெளிவில்லாமல் உள்ளது” என்று வொஷிங்டனில் உள்ள ஜனநாயக பாதுகாப்புக்கான சிந்தனையாளர் அன்டனி ருகிரோ குறிப்பிட்டுள்ளார். “10 ஆண்டுகளுக்கு முன் விடுபட்ட பேச்சுவார்த்தையின் மீள் அறிவிப்பு போல் இது தெரிகிறதே ஒழிய பெரிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட கொரியாவின் அணு ஆயுத திட்டத்தின் மீதான சர்வதேச தடைகள் குறித்தும் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்தில் எதுவும் கூறப்படவில்லை.

எனினும் அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வட கொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்” என்று கூறிய டிரம்ப் “அணு ஆயுத நீக்கம் குறித்து வட கொரியா உத்தரவாதம் அளிக்கும்போது தடை நீக்கம் பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு இந்த தடைகள் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

அதேபோன்று 1950–53 கொரிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை குறித்து இந்த சந்திப்பில் எந்த குறிப்பும் வெளியிடப்படவில்லை. இரு கொரியாக்களுக்கும் இடையில் இன்றும் யுத்த சுழல் நீடிப்பதோடு, ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட இந்த யுத்தம் மோதல் நிறுத்தம் ஒன்றுடனேயே முடிவுக்கு வந்தது.

எனினும் இந்த யுத்தத்தில் யுத்த கைதிகளின் எச்சங்களை மீட்டுக் கொள்வது மற்றும் காணாமல்போனவர்களை நாடுகடத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணு ஆயுத களைவுக்கான அடிப்படை கருத்தொற்றுமை எட்டப்படும் என்று மேற்படி யுத்த நிறுத்தத்தின் மூன்றாவது தரப்பான சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

“இதேநேரம் தனது பாதுகாப்பு குறித்த வட கொரியாவின் நியாயமான கவலையை தீர்க்க அமைதிப் பொறிமுறை ஒன்று தேவையாக உள்ளது” என்று சீனாவின் உயர்மட்ட இராஜதந்திரியான இராஜாக கெளசிலரான வாங் யி, பீஜிங்கில் இருந்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

‘கடந்த காலத்தை கைவிடுவோம்’

வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டதாக செய்தி வெளியானதை அடுத்து நேற்று டொலரின் பெறுமதிக 3 வாரங்களில் உயர்ந்ததோடு ஆசியா பங்குகள் உயர்ந்தன.

விரிவான ஆவணம் என்று டிரம்ப் குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடும் முன்னர், இரு தலைவர்களும் வரலாற்று சந்திப்பில் ஈடுபட்டதாகவும் கடந்த காலத்தை கைவிட தீர்மானித்ததாகவும் கிம் குறிப்பிட்டார். உலகம் பாரிய மாற்றங்களை காணும் என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் கிம்முடன் தான் தனிப்பட்ட பிணைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டிருக்கும் டிரம்ப் அது வட கொரியாவுடனான உறவுகளில் இருந்து வேறுபட்டது என்றார்.

“மக்கள் மகழ்ச்சி அடைந்திருக்கிறார்கள், மக்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள் உலகின் மிக அபாயகரமாக பிரச்சினை பற்றி நாம் அவதானம் செலுத்துவோம்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இதன்போது கிம்மை வெள்ளை மாளிகைக்கு அழைப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிச்சம் நான் அதை செய்வேன்” என்று டிரம்ப் பதிலளித்தார்.

இதன்போது அவர் கிம்மை புத்திசாலி, பெறுமதி மிக்கவர், கடுமையான பேச்சுவார்த்தையாளர் என்று புகழ்ந்தார்.

“அவர் நல்ல திறமையாளர் என்று நான் தெரிந்துகொண்டேன். தனது நாட்டின் மீது அதிகம் அன்பு செலுத்துபவர் என்றும் நான் தெரிந்துகொண்டேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்த உச்சிமாநாடு நடந்த சென்டோசா தீவில் உள்ள ஹோட்டலில் பகலுனவுக்கு பின்னர் தோட்டத்தில் உலா வந்த டிரம்ப், “இந்த சந்திப்பு ஒருவரும் எதிர்பார்க்காத அளவில் சிறந்த முறையில் நடந்தது” என்றார்.

இதன்போது கிம் அருகில் அமைதியாக இருந்தார். எனினும் இந்த சந்திப்பு அமைதிக்கான சிறந்த ஆரம்பம் என்று வட கொரிய தலைவர் முன்னதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை ஆரம்பிக்கும்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

எனினும் கெம்பல்லா ஹோட்டலுக்கு இரு தலைவர்களும் முதல்முறை சந்திப்புக்கு வந்தபோது மிகவும் தீவிரமாகவும் அவதானத்துடனும் இருந்தது தெரிந்தது.

கைகுலுக்கிய எதிரிகள்

வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் அண்மைக்காலத்தில் மோதல்போக்கு தீவிரம் அடைந்திருந்த நிலையிலேயே சற்றும் எதிர்பாராத சூழலில் இரு தரப்புக்கும் இடையில் சுமூகமான சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் டிரம்ப் மற்றும் கிம் நேற்றுக் காலை ஒருவரை ஒருவர் முதல்முறை சந்தித்துக் கொண்டபோது புன்னகைத்தபடி கைலாகு கொடுத்தனர். வசைபாடியவர்கள் நேரில் சந்தித்து கொண்டதால் இருவரிடையே சிறிது நேரம் தர்மசங்கடம் நிலவியது. அதன் பின்னர் இருவரும் சிறிது நேரம் கைகுலுக்கினர். பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக காட்சி கொடுத்தனர். உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் அந்த காட்சியை பதிவு செய்தனர்.

பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பாக இது அமைந்தது.

இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் சிறு மேசையில் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்தபோது, “இங்கு வருவது இலகுவாக இருக்கவில்லை” என்று மொழிபெயர்ப்பாளர் ஊடே டிரம்பிடம் கிம் தெரிவித்தார். “அது உண்மையே” என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்கு பின்னர் மாடிக்கட்டடத்தின் மேடைக்கு வந்து இரு தலைவர்களும் செய்தியாளர்களை பார்த்து கையசைத்தனர்.

முன்னதாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வட கொரியா ஆறு அணு ஆயுத சோதனைகள் மற்றும் பல ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பதோடு அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதம் தம்மிடம் இருப்பதாகவும் அது எச்சரிக்கை விடுத்து வந்தது.


Add new comment

Or log in with...