ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒரு பார்வை | தினகரன்

ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள அணிகள் ஒரு பார்வை

உலக கிண்ண கால்பந்து போட்டி ரஷ்யாவில் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ள நாடுகள் பற்றி ஒரு பார்வை.

கால்பந்து தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் 13-வது முறையாக உலக கிண்ணத்தில் பங்கேற்கிறது. இதில் 1986-ம் ஆண்டு 4-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

ஆரம்ப காலங்களில் பெல்ஜியம் தொடக்க சுற்றிலேயே வெளியேறிவிடும். 1986-ல்தான் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதியில் ஆர்ஜன்டினாவிடம் 0-−2 என்ற கணக்கில் தோற்றதால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

மேலும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்சிடமும் தோற்றதால் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கடந்த உலக கிண்ணத்தில் கால் இறுதிக்கு நுழைந்து இருந்தது. ஆர்ஜன்டினாவிடம் மீண்டும் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. இந்த உலக கிண்ணத்தில் விளையாடும் பெல்ஜியம் திறமை வாய்ந்தது. 32 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதியில் நுழைவதை இலக்காக கொண்டுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து முதல் அணியாக தகுதி பெற்ற பெல்ஜியம் நாட்டில் ஈடன்ஹசார்ட், கெவின் புருனி, ரோமேலு லூகாஷ்போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.

உலக கிண்ணத்தில் 41 ஆட்டத்தில் விளையாடி 14-ல் வெற்றி பெற்றது. 18 போட்டியில் தோற்றது. 9 ஆட்டம் சமனிலை ஆனது.

சிறந்த நிலை: 4-வது இடம் (1986).

இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 14 முறை உலக கிண்ண போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரே ஒரு முறை சம்பியன் பட்டம் பெற்றுள்ளது. தனது நாட்டில் 1966ம் ஆண்டு நடந்த போட்டியில் 4−2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதற்கு அடுத்தப்படியாக 1990ல் 4&வது இடத்தை பிடித்து இருந்தது. கடந்த உலக கோப்பையில் தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

‘ஜி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்துடன் திகழ்கிறது. இந்த முறை 2&வது சுற்றுக்கு முன்னேறுவதில் அந்த அணிக்கு சிரமம் இருக்காது. பெல்ஜியம் மட்டுமே சவாலாக இருக்கும். அந்த அணியுடன் இங்கிலாந்து மோதும் ஆட்டம் ‘ஜி’ பிரிவில் முதல் இடத்தை நிர்ணயிக்கும். இளம் வீரர்களை கொண்ட அந்த அணி சாதிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திர வீரராக ஹேரி கானே இருக்கிறார். அவர் தனது கிளப் (டோட்டன் ஹாம்) அணிக்காக பிரீமியர் லீக் மற்றும் சம்பியன்ஸ் ‘லீக்‘கில் 12 கோல்கள் அடித்து (23 ஆட்டம்) முத்திரை பதித்து இருந்தார். ஜேமி வார்டி, ரகீம் ஸ்டெர் லிங் போன்ற நட்சத்திர வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். இங்கிலாந்து 62 ஆட்டத்தில் 26ல் வெற்றி பெற்றது. 16 போட்டியில் தோற்றது. 20 ஆட்டம் டிரா ஆனது.

துனிசியா

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள துனிசியா 12 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்கிறது. ஒட்டு மொத்தத்தில் 5-வது தடவையாக உலக கோப்பையில் ஆடுகிறது. இதுவரை 2-வது சுற்றுக்கு முன்னேறியது இல்லை.

இந்த உலக கோப்பையிலும் அந்த அணி ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமே. பனாமாவை வீழ்த்துவது இலக்காக இருக்கும். உலக கோப்பையில் இதுவரை 12 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

யூசுப்மஸ்கானி, வஹாபி கசாரி போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். 2-வது சுற்றில் நுழைய கடுமையாக போராடும்.

பனாமா

மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள பனாமா உலக கிண்ண போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

40 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய நாடான அந்த அணி 32 கோடி மக்கள் உள்ள அமெரிக்காவை வெளியேற்றி தகுதி பெற்றது. 1998 உலக கோப்பையில் கொலம்பியாவுக்கும், 2002ல் ஈக்வடோர் அணிக்கும் பயிற்சியாளராக இருந்த ஹெர்மன் கோமஸ் தற்போது பனாமா பயிற்சியாளராக உள்ளார். லூயிஸ் தேஜ்டா, ரோமன் டொரஸ் ஆகியோர் அந்த அணியின் முன்னணி வீரர்களாக உள்ளனர். முதல் வெற்றிக்காக பனாமா காத்திருக்கிறது.


Add new comment

Or log in with...