சாலாஹ்வின் உடற்தகுதி உறுதியாகாத நிலையில் ரஷ்யா வந்தடைந்தது எகிப்து அணி | தினகரன்

சாலாஹ்வின் உடற்தகுதி உறுதியாகாத நிலையில் ரஷ்யா வந்தடைந்தது எகிப்து அணி

முகமது சாலாஹ்வின் உடற்தகுதி குறித்து உறுதியான நிலை தெரியாத போதிலும், நம்பிக்கையுடன் ரஷ்யா வந்தடைந்தது எகிப்து அணி.

பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் எகிப்து அணி கடைசியாக 1990-ம் ஆண்டு இடம்பிடித்திருந்தது. அதன்பின் தற்போதுதான் 28 ஆண்டுகள் கழித்து 3-வது முறையாக தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முகமது சாலாஹ்வின் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கடந்த மாதம் 27-ம் திகதி நடைபெற்ற ஐரோப்பா சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரியல் மட்ரிட் - லிவர்பூல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது முகமது சாலாஹ் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய சுமார் மூன்று வாரங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.

அதன்படி பார்த்தால் வருகிற 15-ம் திகதி உருகுவே அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாட தகுதி பெறுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் சாலாஹ்வுடன் எகிப்து அணி (சனிக்கிழமை) ரஷ்ய வந்தடைந்துள்ளது. சாலாஹ் அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர் உருகுவே அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் வெளிவரவில்லை.

இதுகுறித்து எகிப்து அணி டொக்டர் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த வாரம் தொடக்கத்தில் முகமது சாலாஹ்வின் காயம் குறித்து மதிப்பீடு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. அவர் முழுவதும் குணமடையும் முன்பு, விளையாட அனுமதிக்கமாட்டோம்’’ என்றார்.

எகிப்து அணியின் முகாமையாளர் கூறுகையில் ‘‘எங்கள் அணி போட்டியில் களம் இறங்க தயாராக இருக்கிறது. மனஉறுதியில் அதிகமாக உள்ளது’’ என்றார்.

‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள எகிப்து 15-ம் திகதி உருகுவே அணியை எதிர்கொள்கிறது. 19-ம திகதி ரஷ்யாவையும், 25-ம் திகதி சவூதி அரேபியாவையும் எதிர்கொள்கிறது.


Add new comment

Or log in with...