வரலாற்றுச் சந்திப்புக்கு வழிவகுத்த இரு தமிழர்கள் | தினகரன்

வரலாற்றுச் சந்திப்புக்கு வழிவகுத்த இரு தமிழர்கள்

 

சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் ஆகியோரிடையேயான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிவதற்குப் பின்புலத்தில் இந்தியாவில் பிறந்து சிங்கப்பூரில் வசிக்கும் இரு தமிழர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.

சிங்கப்பூர் அரசின் அமைச்சரவையில் உள்ள தமிழர்களான விவியன் பாலகிருஷ்ணன், கே.சண்முகம் ஆகியோர் இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர்.

இச்சந்திப்பு சிங்கப்பூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதும் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியவர் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சரான பாலகிருஷ்ணன்.

ஏனென்றால், அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் சிறந்த நட்புநாடுகளாக ஒரு சில நாடுகள்தான் இருக்கின்றன. அதில் சிங்கப்பூர் மிகவும் முக்கியமாகும். அதனால்தான் இந்தச் சந்திப்பு சிங்கப்பூரில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்த விவரம் அறிவிக்கப்பட்டதில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் வாஷிங்டனுக்கும், வடகொரியத் தலைநகர் யாங்யாங்குக்கும், சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். அதிலும் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு நடக்கும் தறுவாயில் ஜனாதிபதி ட்ரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்து அறிவித்தார். அதன் பின்னர் வாஷிங்டனுக்குச் சென்று ட்ரம்பை சமாதானம் செய்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வெற்றிகரமாக நடக்கத் துணையாக இருந்தவர் பாலகிருஷ்ணன் ஆவார்.

57-வயதான பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்தவர். மருத்துவம் படித்த பாலகிருஷ்ணன், கண்பார்வை சிகிச்சையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அமைச்சர் சண்முகம். இவர் சிங்கப்பூர் அரசில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் பொறுப்பு இவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது. இரு தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பது, தங்குமிடங்கள், சந்திப்பை சுமுகமாகக் கொண்டு செல்வது உள்ளிட்ட அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார் சண்முகம்.

59- வயதான சண்முகம் ஆளும் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர். வடகொரியாவின் விவகார ஆணையத்தின் தலைவராக இருந்துவரும் சண்முகம்தான், சாங்கி விமானநிலையத்தில் வ கிம் ஜாங் , ட்ரம்ப் ஆகியோரை வரவேற்று ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

சிங்கப்பூரில் இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு குறித்து சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் கூறுகையில்,"70 ஆண்டுகள் அவநம்பிக்கை,போர், இராஜதந்திர உறவில் தோல்வி ஆகியவற்றுக்கு முடிவுகட்டும் விதமாக இந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்தச் சந்திப்புக்காக 2 வாரங்களாக இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறோம். இந்தச் சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பகை தீர்ந்து விடுமா என்பது தெரியாது, ஆனால், நட்பு மலர்வதற்கான முதல்படியாக இருக்கும். இந்தச் சந்திப்புக்கு தேவையான அனைத்துச் செலவுகளையும் சிங்கப்பூர் அரசே ஏற்றுக் கொண்டது. ஏறக்குறைய ரூ.100 கோடிவரை(இந்திய பெறுமதி) செலவானது. 5 ஆயிரம் பொலிஸார், உள்துறை அதிகாரிகள், தீயணைப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் என கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன" எனத் தெரிவித்தார்.

டிரம்ப்,கிம் ஆகியோர் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்புச் செய்ய ஏறத்தாழ 3 ஆயிரம் பத்திரிகையாளர்கள் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர்.

ட்ரம்ப்,கிம் ஜாங் உன் இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வடகொரிய ஜனாதிபதிகிம் ஜாங் சொந்தமாக கழிப்பறை எடுத்து வந்து அதைத்தான் பயன்படுத்தினார். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கிம் ஜாங்குக்கு வரலாறு காணாத பாதுகாப்பு தரப்பட்டு இருந்தது. குண்டு துளைக்காத கார், கிம் ஜாங் என்ன சாப்பிட வேண்டும், யாருடன் பேச வேண்டும், எங்கு அமர வேண்டும், எந்த அறையில் தங்க வேண்டும், அறையில் எத்தனை பேர் தங்க வேண்டும் உள்ளிட்ட அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தன.

பாதுகாப்பில் உச்சக்கட்ட சுவாரஸ்யம் வடகொரிய ஜனாதிபதி சொந்தமாக ‘​ெடாய்லட்’ கொண்டு வந்திருந்ததுதான். அமெரிக்கா மீது இன்னும் முழுமையான நம்பிக்கை வராத காரணத்தினால் என்னமோ, வடகொரியாவினால் கிம் ஜாங் உன் பயன்படுத்த சொந்தமாக 'ரெடிமேட் ​ெடாய்லட்' கொண்டு வரப்பட்டது.

நட்சத்திர ஹோட்டலில் ‘​ெடாய்லட்’ இருந்த போதிலும் அதனை கிம் ஜாங் பயன்படுத்தவில்லை, தான் கொண்டு வந்த கழிப்பறையைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று தென் கொரிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிம் ஜாங் எப்போதும் சுயபாதுகாப்பில் தீவிரமாக ஈடுபாடு காட்டுபவர். கடந்த 32 ஆண்டுகளில் வடகொரியாவின் ஜனாதிபதி வேற்று நாட்டு மாநாட்டில் பங்கேற்கச் சென்றது இதுதான் முதல் முறையாகும். எதிரிகளிடத்தில் தன்னைப் பற்றிய விபரங்கள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

எதிரிகள் எந்தவிதத்திலும் கிம் ஜாங்கை தாக்கலாம், எதிர்காலத்தில் தாக்குவதற்கான திட்டமிடலை செய்யலாம் என்பதால், தன்னைப் பற்றிய எந்தவிதமான இரகசியமும் வெளியே கசிந்துவிடாமல் பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவம் அளிப்பார்.

அதன் காரணமாகவே, தான் பயன்படுத்தும் கழிப்பறையில் இருந்து வெளியேறும், சிறுநீர், மலம் ஆகியவற்றைக் கூட எதிரிகள் கைப்பற்றி, அதன் மூலம் தனது உடல்நிலை, உடலில் உள்ள குறைபாடுகள், திசுக்கள், பக்டீரியாக்கள், என்னமாதிரியான உணவுப்பழக்கம் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடித்து விடலாம் என்பதால், கழிப்பறையைக் கூட கிம் உடன் கொண்டு சென்றுள்ளார்.

கிம் தன்னுடைய நாட்டில் இருந்து புறப்பட்டதில் இருந்து பாதுகாப்பு விஷயத்தில் கவனமாக இருந்துள்ளார். இரு டீகாய் விமானங்கள், தனிக் கப்பலில் கிம்முக்கு தேவையான உணவுகள், குண்டு துளைக்காத கார்கள், குடிநீர், உணவுப்பொருட்கள், உடைகள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டன.

சென்டோசா தீவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கிம் தங்கினாலும் கூட அங்கிருக்கும் உணவுகளைச் சாப்பிடாமல் தான் கொண்டுவந்திருக்கும் உணவுகளையே சாப்பிட்டுள்ளார். ட்ரம்பின் சந்திப்புக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உணவுகளை மட்டுமே கிம் சாப்பிட ஒப்புக்கொண்டுள்ளார்.

உடலின் கழிவுப்பொருட்களில் இருந்து குறிப்பாக சிறுநீர், மலம் ஆகியவற்றில் இருந்து ஒருமனிதனின் உணவுப்பழக்கம், உடலில் உள்ள குறைபாடுகள், இரத்தத்தில் சீனி, உடல் பருமனுக்கான காரணம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், சமீபத்தில், உடலில் ஏற்பட்டிருந்த பிரச்சினை, எப்போது உண்டார், உணவுப்பழக்கம், புற்றுநோய், குடல்நோய் உள்ளிட்ட அனைத்து விதமான விஷயங்களையும் தேர்ந்த மருத்துவர்களால் அறிந்துவிட முடியும்.

கிம் ஜாங் உடல்நலத்தையும் எதிரிகள் அறிந்து கொண்டு அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிவிடக்கூடாது என்பதில் அவர் அவதானமாக இருந்துள்ளார்.

இந்தச் சந்திப்பு ட்ரம்ப் கூறும்போது, "நாங்கள் இரு நாடுகள் குறித்தும் தெரிந்து கொண்டோம். கிம் திறமையான மனிதர். அவர் தனது நாட்டின் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். எங்களது சந்திப்பு வரும் காலங்களில், பலமுறை நடைபெறவுள்ளது" என்றார்.

இந்தச் சந்திப்பு குறித்து கிம் கூறும்போது, ”நாங்கள் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பை நடத்தியுள்ளோம். நாங்கள் கடந்த காலத்தை மறக்க முடிவு செய்துள்ளோம். உலகம் பெரிய மாற்றத்தை காண இருக்கிறது. இந்தச் சந்திப்புக்காக ட்ரம்பிடம் நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.

வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு முடிந்ததும் இரு தலைவர்களும் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர்.

அணு ஆயுத பயன்பாடு முடியும்போதுதான் வடகொரியா மீதான பொருளாதார தடைகள் விலக்கப்படும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

"நான் தடைகளை நீக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்," என்று கூறிய ட்ரம்ப் "கிம் அணு ஆயுத நீக்கம் குறித்து உத்தரவாதம் அளிக்கும்போது அது செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

மேலும், வட கொரியாவில் மிச்சமுள்ள அமெரிக்க இராணுவ வீரர்கள் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்று கிம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.

அணு ஆயுதங்களை கைவிட்டால், வட கொரியா பல விஷயங்களை சாதிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், "மற்ற நாடுகள் வட கொரியாவுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றார்.

வட கொரிய தலைவர் கிம் உடனான சந்திப்பு நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கபூர்வமானதாகவும் இருந்ததாக ட்ரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

"வெள்ளை மாளிகைக்கு கிம்மை அழைப்பீர்களா" என்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'நிச்சயமாக அழைப்பேன்' என்று அவர் கூறினார்.

ஆவணங்களில் கையெழுத்திட்டபின்னர், புன்னகைத்து, கைக்குலுக்கி ட்ரம்பும் கிம்மும் பிரிந்து சென்றனர்.

இந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்கள் உள்ளன.

1. அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

2. கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

3. ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

4. அடையாளம் காணப்பட்டுள்ள போர்க் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


Add new comment

Or log in with...