அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி | தினகரன்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 29 மில். நிதியுதவி

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஐரோப்பிய ஒன்றியம் 29 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

இந்த உதவியினூடாக வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களின் சுமார் 17,500 பேர் பயனடைவார்கள். இதில் அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

தற்சமயம் தற்காலிக முகாம்கள் அல்லது இடைத்தங்கல் முகாம்களில் வசிப்போருக்கு நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவித் தொகை வழங்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த நிதியுதவியைக் கொண்டு, வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். தூய நீர் மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். குறிப்பாக அசுத்த நீர் தேங்கி காணப்படும் கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருப்பதாக ஒன்றியம் அறிவித்துள்ளது. முதலுதவி மற்றும் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுவதுடன், நீரினால் பரவக்கூடிய நோய்களை தவிர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். சர்வதேச செஞ்சிலுவைச் சங்க மற்றும் செம் பிறை சங்கங்களுக்கான (IFRC) அனர்த்த நிவாரணங்களுக்குரிய அவசர நிதியத்துக்கு (DREF) ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் பங்களிப்பின் ஒரு அங்கமாக இது அமைந்துள்ளது என ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மே மாதம் 19 ஆம் திகதி முதல், தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றத்தினால் தென்மேற்கு பிராந்தியத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைத்திருந்தது. இதனால் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்டிருந்தன. தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின்படி சுமார் 175,000 பேர் வரை 19 மாவட்டங்களில் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...