பிரதியமைச்சர் மஸ்தானுக்கு தர்மசங்கடம் | தினகரன்

பிரதியமைச்சர் மஸ்தானுக்கு தர்மசங்கடம்

இந்து கலாசார அமைச்சின் பிரதியமைச்சர் பதவிக்கு காதர் மஸ்தான் எம்.பி நியமிக்கப்பட்டிருப்பது அவருக்கும் இந்துக்களுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதொரு விடயம் என்பதால் அந்நியமனம் தொடர்பில் மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று கோரிக்கை விடுத்தார்.

சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ் எம்.பியிடம் பிரதியமைச்சர் காதர் மஸ்தானின் நியமனம் தொடர்பில் செய்தியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்து கலாசார அமைச்சின் பிரதி அமைச்சர் பதவி நீண்டகாலமாக வெற்றிடமாக இருந்தது. அதனை நிரப்புவதற்கு ஜனாதிபதி எடுத்த முயற்சியினை நான் வரவேற்கின்றேன். எனினும் இதற்காக செய்யப்பட்ட நியமனம் பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.

காதர் மஸ்தான் எம்.பிக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டமை சிறந்ததொரு விடயம். அவருடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் பாராளுமன்றத்தில் பல இந்து எம்.பிக்கள் உள்ள நிலையில் இந்துக்களின் பண்டிகைகள், விரதங்கள் மற்றும் சமய நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாள்வதற்காக வேற்று இனத்தவர் ஒருவரை நியமித்திருப்பதானது இந்துக்களை கேவலப்படுத்தும் விடயமென்றும் அவர் கூறினார்.

சமயம் எனக்கு உயிர். அதற்கு பாதிப்பு வருமாயின் மக்களுடன் வீதியிலிறங்கி போராட நான் தயார் எனவும் அவர் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

 


Add new comment

Or log in with...