கிம் –ட்ரம்ப் வரலாற்று முக்கியத்துவ சந்திப்பு | தினகரன்

கிம் –ட்ரம்ப் வரலாற்று முக்கியத்துவ சந்திப்பு

அணு ஆயுதக்களைவுக்கு இருவரும் இணக்கம்

* சந்திப்பு சிறப்பானதாக இருந்தது -  ட்ரம்ப்
* உலகம் பாரிய மாற்றங்களைக் காணும் - கிம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையில் சிங்கப்பூரில் நேற்று இடம்பெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத களைவை மேற்கொள்வதற்கு இணைந்து செயற்பட இரு தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இரு தலைவர்களுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் அமெரிக்கா தனது பழைய எதிரியான வட கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்ததோடு, தனது அணு ஆயுதத்தை முழுமையாக கைவிடுவதற்கு வட கொரியா உறுதியளித்தது.

“கொரிய தீபகற்பத்தில் முழுமையாக அணு ஆயுத களைவுக்கு டி.பி.ஆர்.கே (வட கொரியா) மற்றும் அதன் தலைவர் கிம் ஜொங் உன்னுக்கு காதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்துள்ளார்” என்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சிறப்பானதாக இருந்ததாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டதோடு உலகம் பாரிய மாற்றங்களை காணும் என்று இந்த ஒப்பந்தம் பற்றி கிம் ஜொங் உன் தெரிவித்தார்.

சென்டோசா தீவிலுள்ள ஹோட்டலில் டிரம்ப் மற்றும் கிம், நேற்றுக் காலை ஒருவரை ஒருவர் முதல்முறை சந்தித்துக் கொண்டபோது புன்னகைத்தபடி கைலாகு கொடுத்தனர்.

பதவியிலிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் வட கொரிய தலைவருக்குமிடையிலான முதல் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் சிறு மேசையில் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்தபோது, “இங்கு வருவது இலகுவாக இருக்கவில்லை” என்று மொழிபெயர்ப்பாளர் ஊடே டிரம்பிடம் கிம் தெரிவித்தார். “அது உண்மையே” என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

 


Add new comment

Or log in with...