வேலைத்தளத்திலுள்ள குறைபாடுகளே கோணேஸ்வரனின் மரணத்திற்கு காரணம் | தினகரன்

வேலைத்தளத்திலுள்ள குறைபாடுகளே கோணேஸ்வரனின் மரணத்திற்கு காரணம்

கொழும்பு தாமரைக்கோபுர வேலைத்தளத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாகவே தாமரைக் கோபுரத்தின் 16 ஆவது மாடியில் இருந்து விழுந்து கிளிநொச்சியைச் சேர்ந்த கோணேஸ்வரனின் உயிரிழந்திருப்பதாக கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்தார். இங்குள்ள மின்தூக்கிகளுக்கருகில் செல்வதற்கான கதவுகளுக்கு பூட்டு இடப்பட்டிருக்க வில்லை.அப்பகுதியில் கடும் இருட்டாக இருப்பதாகவும் புதிதாக  வேலைக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு இங்குள்ள கதவுகள் தொடர்பில் அறிவூட்டப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் இருட்டுக்குள் வரும் புதியவர்கள் அறையென்று நினைத்து மின்தூக்கிக்குள் கால் வைத்து பள்ளத்தில் விழுந்து உயிரிழக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்த 19 வயதான மாணவரான கோணேஸ்வரன் கடந்த வெள்ளிக் கிழமை 16 ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவரின் மரண விசாரணையின் போதே திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி ரூகுல் ஹக் பிரேத பரிசோதனை மேற்கொண்டார்.

இதன் போது சாட்சியமளித்த அவருடன் பணிபுரிந்த சத்ய ரூபன்(28) குறிப்பிடுகையில், இறந்த கோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என, கடந்த 05 ஆம் திகதி அவர் என்னிடம் கூறினார். மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் கழிந்து வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. 08 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும்.

இங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் சண்டை சச்சரவுகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். நண்பர் கோணேஸ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். ​கோணேஸ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது. அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்க நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த சீன நாட்டவரான குவே நினி (47) கூறியதாவது, நாம் அவருடன் வேலை செய்து கொண்டிருந்தாலும் சற்று நேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு அவர் உதவி செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை வேலைகளில் அதிகம் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்திருப்பதாக ஒருவர் கூறினார். அதன் பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.

இறந்த கோணேஷ்வரனின் தந்தை சாட்சியமளிக்கையில்,எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவராவார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் கற்றார். அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து இங்கு வேலை செய்திருக்கிறார். கடந்த 07 ஆம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார். நான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வருமாறு கூறினேன். தான் வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார். இறந்த கோணேஷ்வரனுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு திடீர் சட்ட வைத்திய அதிகாரி ஆலோசனை வழங்கினார். (பா)

 


Add new comment

Or log in with...