கொடுங்கோலாட்சிக்கு பழக்கப்பட்டவர்கள் உண்மை ஜனநாயகத்தை ஏற்க மறுப்பு | தினகரன்

கொடுங்கோலாட்சிக்கு பழக்கப்பட்டவர்கள் உண்மை ஜனநாயகத்தை ஏற்க மறுப்பு

எழுத்திலுள்ள சட்டத்துக்கு அமைய வழக்குகள் தாமதம் ஆகின்றபோதும் புதிய நீதிமன்றத்துக்கு அமைய அனைத்து விசாரணைகளையும் துரிதப்படுத்துவோமென ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ நேற்று தெரிவித்தார்.

இதேவேளை அலோசியஸிடமிருந்து பணம் பெற்றவர்கள் குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து நாட்டு மக்களின் பணத்தை சூறையாடியவர்கள் இன்று நல்லவர்களாகிவிட்டார்களென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் கோட்டாபயவின் கொடுங்கோலாட்சிக்கு பழக்கப்பட்டவர்களால் இன்று முதிர்ச்சி பெற்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதாக கூறிய அமைச்சர் தற்காலத்துடன் கொடுங்கோலாட்சி பொருந்தி வரமாட்டாது என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் "சத்யம்" செய்தியாளர் மாநாடு நேற்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தில் சட்டம் கைக்கு வந்தவாறு அமுல்படுத்தப்பட்டது. ஆனால் எமது அரசாங்கத்தில் அனைத்து சட்டமும் நீதிமன்றத்தினால் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளமைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றன. அதனால் தான் வழக்குகள் தாமதம் அடைகின்றன. உடனடியாக தீர்ப்புக்கள் வழங்கப்படாததால் மக்கள் அரசாங்கம் மீது அலுத்துக் கொள்கின்றனர். இதனை தோல்வியுற்ற அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அனைத்தும் சட்டப்படி நடக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். நோயாளி இறந்தாலும் பரவாயில்லை வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே எமது குறிக்கோள். இதற்காக காலம் கடந்தாயினும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வழக்குகளை துரிதப்படுத்துவதற்காக புதிய நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்வாங்கப்பட்டதன் பின்னர் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரிவித்ததாவது-

சில ஊடகங்கள் பாரிய ஊழல் மோசடியாளர்களை காப்பாற்றுவதற்காக அலோசியஸிடம் பணம் வாங்கிய சம்பவத்தை பெரிதுபடுத்திக் காட்டுகின்றன. இது நெத்தலி மீனை பெரிய மீனாக காட்டி உண்மையை மறைக்கும் செயலென்பதனை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இலங்கையர்கள் முதிர்ச்சி பெற்றுள்ள ஜனநாயகத்தை இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதனையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சமூகவலைத்தளங்களில் தூற்றுவதனையும் கொண்டு மக்கள் இதனை முதுகெலும்பற்ற ஒரு அரசாங்கமாக கருதுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. வளர்ச்சியடைந்த அமெரிக்கா ,பிரித்தானியா போன்ற நாடுகளில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே நடைமுறையில் உள்ளது. அங்கு யாரும் தமது கருத்தை வெளிப்படுத்தலாம். எவரையும் தூற்றலாம். அதனையே நாமும் இங்கு நடைமுறை செய்கின்றோம்.கோட்டா மீண்டும் அரசியலுக்கு வந்து இராணுவ பாணியில் மக்களை நடத்தப் பார்க்கிறார். இது காலத்துக்கு ஒத்துவராத விடயம் என்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன்


Add new comment

Or log in with...