தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு | தினகரன்

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ், ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்த சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

போராட்டங்கள் நடத்தி அரசுக்கு நெருக்கடி தருவோருக்கு அரசு ஊழியர்கள் துணைபோகக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மாநில அரசின் நிதி மற்றும் மக்கள் நலன் கருதி பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வேண்டுகோள் விடுத்தார். மேலும் பேசிய அவர், அரச ஊழியர்களுக்கு 70 சதவீத வருவாய் செலவிடப்பட்டு வருவதாக கூறினார். அரச ஊழியர்களின் நலன் கருதி 7ஆவது ஊதிய குழுவை அமுல்படுத்தியுள்ளோம்.

மாநில அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு போராட்டம் செய்பவர்களுக்கு துணைபோகாமல் இருக்க வேண்டும் என்றார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியை சபாநாயகர் உத்தரவின் பேரில் பெண் காவலர்கள் வெளியேற்றினர்.

விஜயதாரணி வெளியேற்றம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்தது.


Add new comment

Or log in with...