பணத்தை மீளப்பெறும் 3 சட்டமூலங்களும் எங்கே? | தினகரன்

பணத்தை மீளப்பெறும் 3 சட்டமூலங்களும் எங்கே?

ஜே.வி.பி கேள்வி

பிணைமுறி மோசடியால் இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெற கொண்டுவருவதாக ஜனாதிபதி உறுதியளித்த மூன்று சட்டமூலங்களும் எங்கே என ஜே.வி.பி கேள்வியெழுப்பியுள்ளது.

அரசாங்கம் ஏன் இதுவரை இந்தச் சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லையென ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் வினவினார்.

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது மாதம் ஒருமுறை ஆய்வு செய்யப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்றும் அவர் கேள்வியெழுப்பினார். பலவத்தையிலுள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே விஜித ஹேரத் இந்தக் கேள்விகளை முன்வைத்தார்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட பேர்ப்பச்சுவல் ட்ரெஷரி நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகி வருகின்றன.

பெயர்கள் வெளியிடுவது ஒருபுறமிருக்க இழக்கப்பட்ட பொதுமக்களின் பணத்தை மீளப்பெறுவதற்கு மூன்று சட்டங்கள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி கூறினார். ஆனால் இதுவரை எந்தவொரு சட்டமும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை.

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...