Home » IMF இன் இரண்டாவது தவணை டிசம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு

IMF இன் இரண்டாவது தவணை டிசம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு

by Rizwan Segu Mohideen
November 18, 2023 3:39 pm 0 comment

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறுகிய கால இலாப நோக்கமின்றி வீழ்ச்சியடைந்த தேசிய பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் ஆரம்பமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

குறுகிய கால இலாப நோக்கம் இன்றி, வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தின் மேலும் ஒரு ஆரம்பத்தையே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் எடுத்துக்காட்டுகின்றது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் அதற்கு அவசியமான திட்டங்கள் உட்பட கொள்கைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் இதனை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் என்கின்றனர். ஆனால் இது அவ்வாறு தேர்தலை எதிர்பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அல்ல. அவ்வாறு தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தால், அபிவிருத்தி தொடர்பான அனைத்தையும் மறந்து பொருளாதார ரீதியில் மேற்கொள்ள வேண்டிய பாரிய தீர்மானங்களை எடுக்காமல், பொது மக்களுக்கு பணத்தை அச்சடித்தேனும் நிவாரணங்களை வழங்கியிருக்கும். இது அவ்வாறானதொரு வரவு செலவுத்திட்டமல்ல.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உட்பட மக்கள் போராட்டங்கள் போன்றவற்றினால் நாட்டில் அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போனது. அவ்வாறு அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத் தன்மை இல்லாமல்போன ஒரு நாட்டுக்கு நிதி உதவிகளோ, கடன் வசதிகளோ மற்றும் முதலீடுகளோ கிடைப்பதில்லை.

இவற்றை சரியாக முகாமைத்துவம் செய்ய அன்று இருந்த ஆட்சியாளர்களினால் முடியவில்லை. அதனால் அவர்கள் பதவி விலகினர். அப்போது, அதனை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை எதிர்கட்சிக்கு வழங்க நாங்கள் முன்வந்தோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

அந்த சந்தர்ப்பத்திலே தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த கடினமான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அவரின் கொள்கையை அவர் தெளிவாக முன்வைத்தார். குறுகிய கால, பிரபல்யமான வேலைத்திட்டங்கள் அன்றி, நீண்டகால அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களையே தான் செயற்படுத்தவதாக அவர் எடுத்துக்காட்டினார். இந்தக் கொள்கையுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்தில் முன்னோக்கிச் செல்லும்போது மேலே குறிப்பிட்டவாறு பாரிய அளவில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து எதிர்பார்க்க முடியாது.

ஆனால் அவர் நிவாரணங்களையும் வழங்கியுள்ளார். தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தையும் செயற்படுத்தினார். அதேபோன்று நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருந்த பல்வேறு விடயங்களை அகற்றி அபிவிருத்தியை நோக்கி நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான பின்புலத்தையும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் முன்வைத்துள்ளார்.

2024 வரவு செலவுத்திட்டத்தில் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு, முதியோர் மற்றும் அங்கவீனர் கொடுப்பனவு உயர்வு உட்பட கல்வி, சுகாதாரம், பிரதேச அபிவிருத்தி மற்றும் காணி உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தையும் வழங்க அரசாங்கத்திற்கு வருமானம் தேவை. நாம் செலவிடும் தொகைக்கு ஏற்ப வருமானத்தை நாம் ஈட்டிக்கொள்ள வேண்டும். அதுதான் வரவு செலவுத் திட்டமாகும். அரசாங்கம் பெரும்பாலும் வரி வருமானத்தில் இருந்துதான் இவ்வாறான நிவாரணக் கொடுப்பனவுகளை மேற்கொள்கின்றன.

எனவே நாம் வரவு செலவு என்ற இரண்டிலும் சமநிலையைப் பேண வேண்டும். அதிகமான நிவாரணங்களை வழங்க வேண்டுமாயின் வரி விதிப்புகளை உயர்த்த வேண்டியேற்படும். இந்தப் பொறிமுறையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பத்தாயிரம் அதிகரித்தால் அதற்கு மேலதிகமாக கேட்கின்றனர். இந்த அடிப்படைப் பொருளாதார விடயங்களை நாம் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்ப வேண்டும். நடைமுறை ரீதியாக நாம் சிந்திப்போமாயின் அவை வெறும் அரச விரோத கோஷங்களாகும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவை நடைமுறையில் சாத்தியமற்றவை என்பதை இன்று இந்நாட்டு மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

நாம் குறித்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாமையே இந்த அனைத்து பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று எதிர்தரப்பினர் கூறினர். அவ்வாறு செல்லும்போது முக்கியமாக அவர்கள் இடும் நிபந்தனைகளை நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும். பாராளுமன்றத்தில் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுங்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேபோன்று கடந்த அரசாங்கம் பாரிய அளவில் வரி விலக்குகளை வழங்கியமையே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்றும் எதிர்தரப்பினர் கூறுகின்றனர். அப்படியென்றால் வரிகளை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களே ஏற்றுக்கொள்கின்றனர்.

அவ்வாறு வரி அதிகரிக்கப்படும் போதும் அதற்கு எதிராக கோஷங்களை எழுப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் இருவேறு முரண்பட்ட கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையும் மிக விரைவில் எமக்கு கிடைக்கவுள்ளது. எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் அது எமக்கு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் எமக்கு கிடைக்கும் தொகையை விட அதன் ஊடாக ஏனைய கடன் வழங்குனர்களுக்கு எம்மீது எற்படும் நம்பிக்கையே எமக்கு மிக முக்கியம். அந்த நம்பிக்கையின் மூலம் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது நாட்டிற்கு மீண்டும் அபிவிருத்திப் பணிகளுக்காக கடன் வழங்க முன்வருவதுடன் முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளைச் செய்யவும் முன்வருவார்கள். எமது கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு நாட்டில் தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்க முடியும்.

நட்டத்தில் இயங்கிவந்த பல்வேறு அரச நிறுவனங்கள் இலாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளமை, தற்போது நாம் முன்னெடுக்கும் பொருளாதார வேலத்திட்டங்கள் வெற்றியடைந்து வருவதை எடுத்துக்காட்டும் ஒரு விடயமாகக் குறிப்பிடலாம். மேலும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வட்டி வீதங்கள் குறைந்துள்ளன. அந்நியச் செலாவணிக் கையிருப்பு உயர்வடைந்துள்ளது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் தற்போது இல்லை. நாம் தற்போது பாரிய சவால்களை எதிர்கொண்டு அதில் இருந்து மீள்வதற்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.” என்றும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT