'பிக் பொஸ் 2' நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை: சிநேகா மறுப்பு! | தினகரன்

'பிக் பொஸ் 2' நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை: சிநேகா மறுப்பு!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 100 நாட்கள் மிகவும் பரபரப்பான முறையில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதல்முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பிக் பொஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெற்றன.

அனைவரும் எதிர்பார்க்கும் பிக் பொஸ் 2 நிகழ்ச்சி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. பிக் பொஸ் 2 நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். திங்கள் முதல் ஞாயிறு வரை வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் இரவு 9 மணிக்கு பிக் பொஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பொஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் நடிகை சிநேகா இந்நிகழ்ச்சியில் பங்குபெறப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை சிநேகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

பிக் பொஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெறவில்லை என்று அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அடிப்படை ஆதாரமில்லாத வதந்தி இது.

எங்கு என்னவாக இருக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாகவே உள்ளேன். இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்கு முன்பு ஊடகங்கள் என்னிடம் ஒருமுறை கேட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...