கைதான பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் (UPDATE) | தினகரன்

கைதான பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு விளக்கமறியல் (UPDATE)

பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத கைது-Palitha Range Bandara's Son Yashoda Range Bandara Arrested

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவுக்கு எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஒன்றின்போது, மது போதையில் வாகனம் செலுத்தியமை, அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் இன்று (08) காலை கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர் தொடர்பில், சிலாபம் நீதவான் நீதிமன்றிற்கு பொலிசார் அறிவித்திருந்த நிலையில், குறித்த விடயத்தை ஆராய்வது தொடர்பில் நுகேகொட நீதவான் நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில், ஆரச்சிக்கட்டு, கோட்டபிட்டிய சந்தியில் வைத்து, சந்தேகநபர் செலுத்திச் சென்ற, அமைச்சுக்குச் சொந்தமான கெப் ரக வாகனம் நேற்று முன்தினம் (06) அதிகாலை விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பாதையை விட்டு விலகி அருகிலிருந்த வீடொன்றில் மோதியதில் வாகனம் மற்றும் குறித்த வீடு ஆகியன பாரிய சேதத்திற்குள்ளானதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த யசோத ரங்கே பண்டார சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் தனது சுய விருப்பத்திற்கு அமைய ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத கைது (10.43am)

 

 

அரச சொத்துக்கு சேதம்; போதையில் வாகனம்; கைவசம் வாள்

தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகனான, யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டள்ளார்.

அரச சொத்துக்கு சேதம் விளைவித்தமை, குடி போதையில் வாகனம் செலுத்தி, விபத்து ஏற்படுத்தியமை, தடை செய்யப்பட்ட கத்தி கட்டளைச் சட்டத்தின கீழ் வாள் ஒன்றை கைவசம் வைத்திருந்த தவறைப் புரிந்தமை உள்ளிட்ட குற்றசாட்டுகனின் கீழ், யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (06) அதிகாலை வேளையில், ஆரச்சிக்கட்டு, கோட்டபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடரபிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த வாகனம், தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தில் பயணித்திருந்த வேளையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் பலியானதோடு இது தொடர்பில், பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...