பாடசாலை செல்லும் பருவத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம் | தினகரன்

பாடசாலை செல்லும் பருவத்தில் தொழில் புரிய வேண்டிய அவலம்

உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.சிறுவர் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இன்றைய தினம் சிறுவர் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒருபுறம், குழந்தைகள் புத்தகப் பையுடன் பாடசாலை செல்வதைப் பார்க்கும் போது, மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றொருபுறம், சில குழந்தைகள் பாடசாலை செல்ல முடியாமல், தொழில் பார்ப்பதைப் பார்க்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.

இக்குழந்தைகளின் மனதிலும் படித்து சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். வறுமை, பெற்றோர் இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் அந்தக் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறி விடுகிறது.

இப்படிப்பட்ட குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகளவில் 21.5 கோடி சிறுவர்கள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். பாடசாலைக்குச் செல்ல முடியாமலும், மற்றக் குழந்தைகளைப் போல விளையாட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். பெரும்பாலானோருக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. சிறார்களாக இருக்க இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். சில நாடுகளில் போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ), எந்த வயதில் தொழில் பார்க்க வேண்டும் என்பதை வரையறுத்துள்ளது. அதன்படி, கடினமான வேலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கட்டாயமாக கல்வி கற்க வேண்டும். 13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள், இலேசான தொழில் பார்க்கலாம் (அவர்களது கல்வி, சுகாதாரம், மனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்) . பெரும்பாலான குழந்தைகள், குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான், கட்டாயமாக வேலைக்கு அனுப்பப்படுகின்றனர். முதலில் இவர்களின் பெற்றோர் வருமானத்துக்கு சிறப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும்.சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத நாடாக அனைத்து நாட்டையும் மாற்றலாம். மனதில், ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு பாடசாலைக்குச் செல்லும் மற்றக் குழந்தைகளை, இவர்கள் ஏக்கத்துடன் பார்ப்பது யாருக்குத் தெரியும்?

இதனால், சிலர் மனதளவில் பாதிக்கப்பட்டு தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். பல இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் குறைந்த சம்பளம் கொடுத்து, கொத்தடிமைகளாகவும் நடத்தப்படுகின்றனர். இது சமுதாயத்தில் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இலங்கைச் சிறுவர்களில் 90.1 சதவீதமானவர்கள் மாத்திரமே, பாடசாலைக்குச் செல்வதாக மதிப்பிடப்படுகிறது.

இலங்கையில், கட்டாயக்கல்வி நடைமுறை காணப்படும் நிலையில்,எதற்காக இவ்வாறு சிறார்கள் தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது. வறிய மாணவர்கள், அடிப்படையான கல்வியைக் கூடக் கற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு, அவர்களுக்கான சவால்கள் காணப்படுகின்றன என்பது இங்கு தெளிவாகத் தெரிகிறது. இதற்கு இலங்கையில் இடம்பெற்ற போரும், முக்கியமான காரணமாக அமைந்தது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தகவலின்படி, உலகில் சிறுவர் தொழிலாளர்களாக உள்ளோரில் பெரும்பான்மையானோர் முரண்பாடு, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே வசிக்கின்றனர்.


Add new comment

Or log in with...