துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி | தினகரன்


துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி

துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உப தலைவர் பலி-Uragasmanhandiya Shooting Karandeniya PS Vice Chairman Shot Dead

 

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நேற்று (08) இரவு காலி, ஊரகஸ்மங்ஹந்திய, கொரகீன பிரதேசத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர், டொனால்ட் சம்பத் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர், கரந்தெனிய, பொரகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (SLPP) உறுப்பினரான குறித்த நபர், கெப் ரக வாகனமொன்றில் பயணித்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் துப்பாக்கிப் பிரயோக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும், T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான மெகசின் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமானதாக கருதப்படும் கையடக்க தொலைபேசியொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து, இன்று (09) காலை சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக, ஊரகஸ்மங்ஹந்திய பொலிசார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுக்கு அமையவும் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமையவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ், ஊரகஸ்மங்ஹந்திய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


Add new comment

Or log in with...